தமிழின் முன்னணி இயக்குநராக உள்ள கார்த்திக் சுப்புராஜ், சிறுசிறு குறும்படங்களை இயக்கி 'நாளைய இயக்குநர்' நிகழ்ச்சி மூலம் திரைத்துறைக்கு வந்தார். விஜய் சேதுபதியை வைத்து இயக்கிய 'பீட்சா' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். அதன்பிறகு 'ஜிகர்தண்டா', 'இறைவி' போன்ற படங்களை இயக்கி, தான் ஒரு வித்தியாசமான இயக்குநர் என ரசிகர்களிடம் நிரூபித்தார்.
இதையடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து 'பேட்ட' படத்தை இயக்கினார். தீவிர ரஜினி ரசிகரான கார்த்திக் சுப்புராஜ், தன்னுடைய தலைவரை நாகரிகமாக இந்தப் படத்தில் காட்டியிருந்தார். இந்தப் படம் ரஜினி ரசிகர்கள் மட்டுமல்லாமல் பொதுவான சினிமா ரசிகர்களையும் திருப்திப்படுத்தியது. அதைத் தொடர்ந்து தனுஷை வைத்து 'ஜகமே தந்திரம்' படத்தை இயக்கி முடித்துள்ளார்.
தற்பொழுது விக்ரம்- துருவ் விக்ரம் கூட்டணியில் புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜின் பிறந்தநாள் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. அதையொட்டி படக்குழுவினரோடு கேக் வெட்டி கார்த்திக் சுப்புராஜ் பிறந்தநாளை கொண்டாடினார். இதில் விக்ரம், துருவ் விக்ரம், படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
டுவிட்டர் வாயிலாக அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த நடிகர் தனுஷ், தான் பணியாற்றிய இயக்குநர்களில் தலைசிறந்த ஒருவர் கார்த்திக் சுப்புராஜ் என புகழ்ந்துள்ளார்.
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள 'ஜகமே தந்திரம்' படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாக உள்ளது.

