ஷ்ருதி: சுதந்திரம் தரும் எழுத்து
எழுத்துதான் தம்மைச் சோகத்திலிருந்து மீட்பதாகச் சொல்கிறார் ஷ்ருதிஹாசன்.
நடிப்பது, இசையமைப்பது, பாடல்கள் பாடுவது உள்ளிட்ட திரையுலகப் பணிகளுக்கு மத்தியில் தொடர்ந்து பாடல்களையும் கவிதைகளையும் எழுதி வருவதாக அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"எழுத்து என்பது எப்போதுமே எனக்கு சுதந்திரத்தைக் கொடுக்கும் அம்சமாக இருந்து வருகிறது. கடும் வேலைப்பளுவுக்கு மத்தியில் எழுதுவது மட்டுமே எனக்கான நிவாரணியாக இருக்கிறது. பாடல்கள் எழுதுவது எனக்குப் பிடித்தமான செயல்," என்று கூறுபவர், பல ஆண்டுகளாகத் தனது எழுத்துத் திறனை இடைவிடாமல் கூர்தீட்டி வருவதாகச் சொல்கிறார்.
தாம் எழுதும் கதைகளுக்கும் கவிதைகளுக்கும் திரை வடிவம் கொடுக்கவேண்டும் என்று விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ள ஷ்ருதி, எத்தகைய சோகத்தில் இருந்தும் மீட்கும் சக்தி எழுத்துக்கு உள்ளது என்கிறார்.
கமல்ஹாசனுக்குப் பதிலாக சிம்பு
நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் சிம்பு.
இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ள நிலையில், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அவர் பங்கேற்க இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.
'பிக்பாஸ் சீசன்-5' நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க இயலாத நிலையில் உள்ளாராம் கமல்ஹாசன். அரசியல் பணிகள் காரணமாக அவர் அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிட்டதாகவும் அவருக்குப் பதில் சிம்பு ஒப்பந்தமாகி உள்ளார் என்றும் கூறப்படுகிறது.
இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் நிகழ்ச்சியில் பங்கேற்ற கமலுக்கு இணையாக சிம்புவுக்கும் சம்பளம் பேசப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

