இந்திய தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்த் திரையுலகம் மொத்தம் ஏழு விருதுகளைக் கைப்பற்றியுள்ளது.
இம்முறை சிறந்த நடிகராக தனுஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில் அவர் நடித்த 'அசுரன்' தமிழில் சிறந்த திரைப்படமாகத் தேர்வாகி உள்ளது.
67ஆவது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று முன்தினம் மாலை அறிவிக்கப்பட்டன.
ஓராண்டு தாமதமாக விருதுகள் அறிவிக்கப்பட்டாலும் தனுஷ் ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டம் நிலவுகிறது.
'அசுரன்' படத்துக்கு விமர்சன, வசூல் ரீதியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில் தற்போது விருதும் பெற்றுள்ளது.
தனுஷின் உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம்
இந்நிலையில் சமூக நீதிக்காக குரல் கொடுத்த 'அசுரன்' தேசிய விருது வென்றது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.
இந்தப் படத்தில் 50 வயதை ஒத்த ஒரு மனிதரின் மனநிலையை, உடல்மொழியை தனுஷ் மிகவும் இலகுவாக ரசிகர்கள் கண்முன் கொண்டுவந்தார் என அவர் பாராட்டி உள்ளார்.
தனுஷ், படக்குழுவினரின் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைத்திருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி என்றும் வெற்றிமாறன் கூறியுள்ளார்.
"நான் புதிதாகச் சொல்வதற்கு எதுவும் இல்லை. எல்லாமே தனுஷின் உழைப்பால் விளைந்த பலன்.
'குதிரையை தண்ணீரின் அருகில்கொண்டு போய் நிறுத்தத்தான் முடியும். தண்ணீரை குடிக்கவைக்க வற்புறுத்த முடியாது' என்று ஒரு பழமொழி உண்டு.
"அதுபோல இயக்குநரின் படத்தில் ஒரு நடிகர் விருது வாங்குவது என்பது முழுக்க முழுக்க அவரது திறமையால் மட்டும்தான். அவர் இன்னும் பல உயரங்களைத் தொடுவார்," என்று இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.
நடுவர்களைக் குழம்ப வைத்த 'ஒத்த செருப்பு' திரைப்படம்
நடிகர் பார்த்திபன் தயாரித்து, இயக்கி, நடித்த 'ஒத்த செருப்பு' படம் இரண்டு தேசிய விருதுகளை தட்டிச் சென்றுள்ளது.
ஒரு தனி மனிதனின் உழைப்பில் உருவான படத்துக்கு இந்த சிறப்புக் கௌரவம் கிடைத்திருப்பது உற்சாகம் அளிப்பதாக திரையுலகத்தினர் தெரிவித்துள்ளனர்.
சிறப்புத் தேசிய விருது, சிறந்த ஒலிப்பதிவு ஆகிய பிரிவுகளில் 'ஒத்த செருப்பு' விருதுகளை வென்றுள்ளது. ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி இந்தப் படத்துக்கு ஒலிப்பதிவு செய்துள்ளார்.
'ஒத்த செருப்பு சைஸ் 7' படத்தின் மூலம் தமிழ் சினிமாவை உலகத் தரத்திற்கு பார்த்திபன் உயர்த்தி உள்ளதாக சக கலைஞர்கள் பாராட்டி உள்ளனர்.
இப்படத்தில் பல கதாபாத்திரங்கள் இருந்தாலும் அவர்கள் குரல்கள் மட்டுமே திரையில் கேட்கும். பார்த்திபன் மட்டுமே எல்லோரிடமும் கலந்துரையாடுவார். அவர் மட்டுமே திரையிலும் தோன்றுவார் என்பதுதான் சிறப்பம்சம். இப்படம் ஏன் சிறப்பு விருதுக்கு தேர்வானது என்பது குறித்து நடுவர் குழுவில் இடம்பெற்றிருந்த இசையமைப்பாளர் கங்கை அமரன் விளக்கமளித்துள்ளார். 'ஒத்த செருப்பு'க்கு எந்தப் பிரிவில் விருது கொடுப்பது என நடுவர் குழு குழம்பிப் போனதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
"அதில் கதை, வசனம், நடிப்பு, திரைக்கதை, இயக்கம் என அனைத்தையும் பார்த்திபனே செய்திருந்தார். அவை அனைத்துமே சிறப்பாக இருந்ததால் நடுவர்கள் அனைவரும் முதலில் குழம்பினாலும், பிறகு ஒருமித்த கருத்துடன் அப்படத்திற்கு சிறப்பு தேசிய விருது அளிக்க முடிவு செய்தனர்," என கங்கை அமரன் தெரிவித்துள்ளார்.
சாதித்துக் காட்டிய சேதுபதி, நாக விஷால்
இதற்கிடையே சிறந்த உறுதுணை நடிகருக்கான விருதை 'சூப்பர் டீலக்ஸ்' படத்தில் நடித்த விஜய் சேதுபதி பெற்றுள்ளார்.
'கேடி (எ) கருப்புதுரை' திரைப்படத்தில் நடித்த நாக விஷால் சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருதைப் பெற்றுள்ளார். இருவருமே ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்துக்கு ஏற்ப அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பதாக திரையுலகத்தினர் பாராட்டுகின்றனர்.
தமிழ் இசைக்கு அங்கீகாரம்
இசையமைப்பாளர் டி.இமானுக்கு 'விஸ்வாசம்' படத்துக்காக சிறந்த இசையமைப்பாளர் (பாடல்கள்) விருது கிடைத்துள்ளது.
தமிழ் இசைக்கு தேசிய அளவில் அங்கீகாரம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் இசைப்பிரியர்கள் ஆதரவால் இது சாத்தியமாகியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

