கார்த்தி நடிக்கும் 'சுல்தான்' படம் ஏப்ரல் 2ஆம் தேதி வெளியீடு காண்கிறது.
இதையடுத்து அப்படக்குழுவினர் சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர்.
அப்போது 'மாஸ்டர்' படம் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடியதால்தான் 'சுல்தான்' படத்தை நேரடியாக இணையத்தில் வெளியிடுவது என்ற முடிவை கைவிட்டதாக தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு தெரிவித்தார்.
கார்த்தி, ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ள 'சுல்தான்' படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். யோகிபாபு, சமுத்திரகனி, நெப்போலியன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். செய்தியாளர் சந்திப்பில் பேசிய கார்த்தி, ராஷ்மிகாவையும் யோகிபாபுவையும் வெகுவாகப் பாராட்டினார்.
"ராஷ்மிகாவின் நடிப்பு என்னை மலைக்க வைத்தது. அவருக்கு தென்னிந்தியாவில் மட்டுமல்லாமல், வடக்கிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சரியான விளையாட்டுப் பெண்.
"படப்பிடிப்புக்கு வந்தால் லூட்டி அடித்தபடி இருக்கிறார். அதேசமயம் அவர் நடிக்கவேண்டிய காட்சிக்காக அழைத்தால் உடனே தலைகீழாக மாறிவிடுவார். ஒரே நிமிடத்தில் தாம் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரமாக மாறி, சரியாக வசனம் பேசி அவர் அசத்துவதைக் கண்டு வியந்தேன்.
"தமிழில் அவருக்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்திருக்கின்றன. ஆனால், ஒரேமாதிரியான கதாபாத்திரம் என்றால் தவிர்த்து விடுகிறார். அத்தகைய பக்குவம் அவரிடம் உள்ளது. கிராமத்துப் பெண்ணாக நடிக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்து இந்தப் படத்தில் என்னுடன் இணைந்து நடித்துள்ளார்," என்றார் கார்த்தி.
தாம் வெவ்வேறு ரகப் படங்களில் நடிப்பதையே விரும்புவதாக குறிப்பிட்ட அவர், 'தீரன்',' கைதி' ஆகிய இரு படங்களுமே மாறுபட்டு இருந்ததால்தான் வெற்றி பெற்றன என சுட்டிக் காட்டினார்.
ஆளைப் பார்த்து எடைபோடக் கூடாது என்பதை யோகிபாபுவைப் பார்த்து கற்றுக் கொண்டதாக கார்த்தி குறிப்பிட்டபோது அரங்கில் சிரிப்பலை எழுந்தது.
தாம் சொல்வது உண்மை என்றும் யோகிபாபுவுடன் இணைந்து நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது என்றும் தெரிவித்தார் கார்த்தி.
"இயக்குநர் அமீரின் அலுவலகத்துக்கு வெளியே யோகிபாபு காத்திருப்பதைப் பார்த்திருக்கிறேன். அதன்பிறகு சின்ன கதாபாத்திரங்களில் நடித்து, படிப்படியாக முன்னேறி வந்துள்ளார். 'யாமிருக்க பயமேன்' படத்தில் அவரது நடிப்பைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்திருக்கிறேன்," என்றார் கார்த்தி.
யோகிபாபுவை நேரில் சந்தித்தபோதுதான் அவர் பெரிய புத்திசாலி என்பது தமக்குப் புரிந்தது என்று குறிப்பிட்டவர், ஒரு காட்சியை எப்படி உருவாக்கவேண்டும் என்பதை யோகி நன்றாகத் தெரிந்து வைத்திருப்பதாகவும் பாராட்டினார்.
"ஒரு வார்த்தையைச் சொன்னால் அதை வைத்து நூறு வார்த்தைகளைச் சொல்லும் அளவுக்கு விவரமானவர். ஒருநாள் மொட்டை மாடியில் கிரிக்கெட் ஆடும் காணொளிப் பதிவு ஒன்றைப் பகிர்ந்தார். அவர் நல்ல விளையாட்டு வீரர் என்பது அப்போதுதான் தெரிந்தது. நடிகர் சங்க விழா ஒன்றில் சிறப்பாக கால்பந்து விளையாடியதை நானும் பார்த்திருக்கிறேன்," என்றார் கார்த்தி.
தாம் இருபது நிமிடங்கள் மட்டுமே கதை கேட்டு நடிக்க ஒப்புக்கொண்ட ஒரே படம் 'சுல்தான்' என்று குறிப்பிட்ட அவர், எந்தப் படமாக இருந்தாலும் யார் இயக்கினாலும் முழுத் திரைக்கதையை தம்மிடம் தரவேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்தார்.
"எனது இந்த நிபந்தனையைக் கேட்டு பலர் ஓடிவிடுவார்கள். ஆனால் பாக்யராஜ் கண்ணன் மிகுந்த பொறுமைசாலி. இந்தப் படத்தின் திரைக்கதைக்காக இரண்டாண்டுகள் வேலை பார்த்துள்ளார்.
"பாக்யராஜ் பெரிய விஷயங்களாக யோசிக்கிறார். அதுவே இப்போது அரிதாக இருக்கிறது. இந்தப் படம் வெற்றி பெற்றால் அனைத்து மொழிகளிலும் மறுபதிப்பு செய்யப்படும் என நம்புகிறேன். காரணம் இது அப்படிப்பட்ட கதை," என்று பாராட்டினார் கார்த்தி.
ராஷ்மிகா மந்தனாவுக்கு தமிழில் இது முதல் படம் என்பதால் அவரைக் கொண்டாடும் தெலுங்கு ரசிகர்களும் இப்படத்தின் வெளியீட்டை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.
கார்த்தி
, :

