ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான 'தலைவி'யின் வெளியீட்டை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
இந்நிலையில் இப்படத்தின் முன்னோட்டக் காட்சித் தொகுப்பு வெளியீடு அண்மையில் நடைபெற்றது.
இதில் கங்கனா ரணாவத், அரவிந்த்சாமி உட்பட ஒட்டுமொத்த படக்குழுவினரும் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய படத்தின் நாயகன் அரவிந்த்சாமி, தாம் எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் நடிக்க அதிகம் சிரமப்படவில்லை என்றார்.
"உண்மையில் இந்த வேடத்தில் ரசித்து நடித்தேன். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்தப் படத்துடனான பயணம் நீடித்தது. கண் முன்பு உள்ள மைக்கைப் பார்க்கும்போது 'என் ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகளே' என்று தொடங்கவேண்டும் எனத் தோன்றுகிறது.
"ஆனால் அந்த வார்த்தைகள் ஒருவருக்கு மட்டுமே சொந்தம் என்பதால் வணக்கம் என்று மட்டும் சொல்கிறேன். பல ஆளுமைகளின் கதாபாத்திரங்கள் நிறைந்த இப்படத்தில் புரட்சித்தலைவராக நடிக்கவைத்துள்ள இயக்குநர் விஜய்க்கு என் நன்றிகள்," என்றார் அரவிந்த்சாமி.
சிறு வயது முதலே எம்ஜிஆர் என்ற மனிதரைப் பார்த்து தாம் பிரமித்துப் போனதாக குறிப்பிட்ட அவர், எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் நடிப்பதை மிகப்பெரிய பொறுப்பாகக் கருதியதாக தெரிவித்தார்.
"ஒரு கதாபாத்திரத்தை எடுத்துக்கொண்டால் அதற்கு என்னவெல்லாம் தேவை என்பது நமக்கு முன்பே தெரிந்துவிடும். அந்தக் கதாபாத்திரம் திரையில் நன்றாக இருக்கவேண்டும் எனும் ஆர்வம் அதிகரிக்கும்.
"இதனால் எதுவுமே சிரமமாகத் தெரியாது. அந்த வகையில் நான் இந்தப் படத்துக்காக சிரமப்படவில்லை," என்றார் அரவிந்த்சாமி.
படத்தின் நாயகி கங்கனா ரணாவத் பேசுகையில், "இயக்குநர் விஜய் அளவிற்கு திரையுலகில் வேறு யாரும் தம்மை மரியாதையுடன் நடத்தியதில்லை," என்று நெகிழ்வுடன் குறிப்பிட்டார்.
மீண்டும் விஜய்யுடன் இணைந்து செயல்பட தாம் எப்போதுமே தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள சமுத்திரக்கனி, இத்தகைய வாய்ப்பு கிடைத்ததை பெரும் ஆசீர்வாதம் எனக் கருதுவதாகக் குறிப்பிட்டார்.
"மிகப்பெரிய கலைஞர்களுடன் நானும் பணியாற்றி இருப்பதை நினைத்தால் மகிழ்ச்சியாக உள்ளது. இயக்குநர் விஜய் ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகத்தைக் கொடுத்து படிக்கச் சொன்னார். நள்ளிரவு 2 மணிக்கு புத்தகத்தைப் படித்து முடித்ததும் அவரைத் தொடர்புகொண்டு, இப்படிஎல்லாம்கூட மனிதர்கள் வாழ்ந்துள்ளனரா என கேட்டு வியந்தேன்.
"எனக்கான கதாபாத்திரத்தில் என்னால் சிறப்பாக நடிக்கமுடியுமா எனும் சந்தேகத்தை நானே எழுப்பியபோது விஜய் ஊக்கமளித்தார். எம்ஜிஆரை சினிமாவில்தான் பார்த்திருக்கிறேன்.
"அண்ணன் அரவிந்த்சாமியால் 40 நாட்கள் எம்ஜிஆருடன் பயணம் செய்யும் பாக்கியம் கிட்டியது," என்றார் சமுத்திரக்கனி.
கங்கனா முன்பு நின்று நடிப்பதற்குத் தமக்கு பயமாக இருக்கும் என்று குறிப்பிட்டவர், பல தருணங்களில் அம்மா ஜெயலலிதாவின் ஆத்மாவே கங்கனாவுக்குள் புகுந்து நடிப்பது போல் இருந்தது எனப் பாராட்டினார்.

