விஜய்க்கு ஜோடியானார் பூஜா
'தளபதி 65' படத்தில் நாயகி யார் என்பது தெரிய வந்துள்ளது. அப்படத்தின் தயாரிப்பு தரப்பு பூஜா ஹெக்டேதான் நாயகியாக ஒப்பந்தம் செய்ய்யப்பட்டிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
'மாஸ்டர்' படத்தை அடுத்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிக்கிறார் விஜய். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் நாயகியாக ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தம் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. பின்னர் சமந்தா உள்ளிட்ட வேறு சில பெயர்களும் அடிபட்டன.
இந்நிலையில் தெலுங்கு, இந்தியில் முன்னணி நடிகையாக உள்ள பூஜா ஹெக்டேவை ஒப்பந்தம் செய்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இதை அறிவித்துள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
காஷ்மீரில் ஆன்ட்ரியா குதூகலம்
அண்மையில் விடுமுறையின்போது காஷ்மீர் சென்று திரும்பியுள்ளார் நடிகை ஆன்ட்ரியா.
பனி சூழ்ந்த பகுதிகளில் பனிக்கட்டிகளைக் கையில் ஏந்தி நிற்பதையும் அவற்றை வீசியெறிந்து விளையாடுவதையும் புகைப்படங்களாகப் பதிவு செய்து இன்ஸ்டகிராமில் வெளியிட்டுள்ளார்.
"தால் ஏரியில் மேற்கொண்ட படகுச்சவாரி, பனி படர்ந்த மலைகள், குல்மார்க் பகுதியில் பனி படர்ந்த சாலைகள் ஆகியவற்றை வாழ்நாள் முழுவதும் மறக்க இயலாது," என உற்சாகத்துடன் சொல்கிறார் ஆன்ட்ரியா.
"இயற்கை அழகு நிறைந்த ஆசீர்வதிக்கப்பட்ட பூமி இது. எனினும் மனிதர்கள் ஏற்படுத்திய சர்ச்சைகள் சாபமாக அமைந்துள்ளன. இந்த அழகான நிலப்பகுதியில் அமைதியும் நல்லிணக்கமும் நிலவ வேண்டும். இதற்காக இறைவனைப் பிரார்த்திக்கிறேன்," என்றும் ஆன்ட்ரியா தெரிவித்துள்ளார்.
தற்போது அவர் மிஷ்கின் இயக்கத்தில் 'பிசாசு-2', 'கா,' சுந்தர் சி.யின் 'அரண்மனை-3' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

