மீண்டும் கொரோனா தொற்றுப்பரவல் அதிகரிக்கக் கூடாது என்பதே தமது பிரார்த்தனையாக உள்ளது என்கிறார் நடிகை ரகுல் பிரீத் சிங்.
அண்மைய பேட்டி ஒன்றில், முறையாக உடற்பயிற்சி செய்தால் போதும், எத்தகைய கிருமித்தொற்றுப் பரவலையும் எதிர்த்து நிற்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சினிமாவில் நடித்துக்கொண்டே உடற்பயிற்சி மையம் தொடங்கி அதை நல்லபடியாக நடித்தி வருகிறார். எனினும் கொரோனா விவகாரத்தால் சில மாதங்கள் நஷ்டத்தை எதிர்கொண்டாராம்.
"நான் உடற்பயிற்சிக் கூடம் தொடங்கியது எல்லோருக்குமே தெரியும். ஆரம்பத்தில் இளைஞர்களால் உடற்பயிற்சிக் கூடம் நிரம்பி வழிந்தது. நல்ல வருமானமும் வந்தது.
"ஆனால் ஊரடங்கு காலத்தில் வியாபாரம் சுத்தமாக அடிவாங்கியது. அந்த நேரத்தில் நஷ்டமும் ஏற்பட்டது. ஆனாலும் என்னிடம் வேலை பார்த்த அனைத்து ஊழியர்களுக்கும் முழு சம்பளமும் கொடுத்தேன்," என்கிறார் ரகுல் பிரீத் சிங்.
உடற்பயிற்சிக் கூடத்தை எப்படி நடத்த வேண்டும் என பாடம் நடத்துவதற்காக தமது அனுபவத்தை பகிரவில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை புரிந்துகொள்ள வைப்பதே தமது நோக்கம் எனக் கூறியுள்ளார்.
"எனக்குத் தெரிந்து ஊரடங்கின்போதும் வீட்டிலோ, வேறு ஏற்பாடுகள் மூலமாகவோ உடற்பயிற்சியில் ஈடுபட்டவர்களைக் கொரோனா கிருமி அண்டவில்லை. எனவேதான் உடற்பயிற்சி அவசியம் என்கிறேன்.
"இப்போது வியாபாரம் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிக்கொண்டு இருக்கிறது. உடற்பயிற்சி மையம் தொடங்கிய பிறகு கஷ்டமோ நஷ்டமோ எது வந்தாலும் சோர்ந்து போய்விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்.
"இன்னொரு தடவை ஊரடங்கு வராமல் இருந்தால் நல்லது. எனினும் என்ன நடக்குமோ என்பது குறித்து யோசிக்காமல் உடற்பயிற்சி செய்வதில் நமது கவனம் இருக்க வேண்டும்.
"உடற்பயிற்சி செய்வது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவும் என்பதோடு நோய்கள் அண்டாமல் பாதுகாக்கவும் செய்யும். இதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்," என்கிறார் ரகுல் பிரீத் சிங்.
இதே அறிவுரையை வழங்குகிறார் மற்றொரு நடிகை 'பிக்பாஸ்' புகழ் சாக்ஷி அகர்வால்.
சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிடுகிறார். அவற்றுள் பல அவர் உடற்பயிற்சி செய்யும்போது எடுக்கப்பட்ட படங்களாகவே இருக்கும்.
அந்தப் படங்கள் மற்றவர்களுக்கும் உடற்பயிற்சி மீதான ஆர்வத்தை தூண்டக்கூடியதாக இருக்கும் என்கிறார். அண்மைய பேட்டியில் கூட உடற்பயிற்சி செய்வதன் அவசியம் குறித்து தாம் விரிவாக விவரித்து இருப்பதாகச் சுட்டிக்காட்டுகிறார்.
"கொரோனா காலம் எல்லாரையும் போலவே எனக்கும் மிகப்பெரிய சவாலாக இருந்தது. படப்பிடிப்புகள் ஒத்தி வைக்கப்பட்டு, வீட்டைவிட்டு வெளியில் கால் எடுத்து வைக்க முடியாமல் தவித்தேன். குறிப்பாக, உடற்பயிற்சிக்கூடம் போக முடியவில்லை.
"அப்போதுதான் மாற்று ஏற்பாடு குறித்து யோசிக்கத் தோன்றியது. ஏன்... வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே உடற்பயிற்சி செய்யக்கூடாது என்று நினைத்தேன்.
"பிறகென்ன... கையில் கிடைத்த தண்ணீர் போத்தல், தலையணை, நாற்காலி போன்ற பொருள்களை வைத்து உடற்பயிற்சிகளை செய்ய ஆரம்பித்தேன். அது தொடர்பான காணொளிகயை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டபோது நல்ல வரவேற்பு கிடைத்தது," என்கிறார் சாக்ஷி.
, :
ரகுல் பிரீத் சிங்