புகைப்படத்தால் பரவும் தகவல்
விக்னேஷ் சிவன், நயன்தாரா இணைந்து காட்சியளிக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
அதில் விக்னேஷ் சிவன் மீது சாய்ந்துள்ள நயன்தாராவின் கையில் பிளாட்டினம் மோதிரம் ஒன்று பளிச்சென கண்ணில் படுகிறது.
புகைப்படத்தின் கீழ், "விரலோடு உயிர்கூட கோர்த்து'' என்று பதிவிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.
இதையடுத்து இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக தகவல் பரவி வருகிறது.
இதை இருவரும் உறுதி செய்யாத நிலையில் ஏராளமானோர் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
கிருமித்தொற்று: 3 நடிகர்கள் பாதிப்பு
நடிகர்கள் மாதவன், அமீர் கான், பக்ரு ஆகிய மூவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தாம் உடல்நலம் தேறி வருவதாக தமது டுவிட்டர் பக்கத்தில் மாதவன் குறிப்பிட்டுள்ளார். தற்போது வீட்டிலேயே தம்மை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக நடிகர் அமீர் கான் கூறியுள்ளார்.
இந்நிலையில், நடிகர் பக்ருவும் (படம்) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
மலையாளத்தில் பிரபலமாக உள்ள குள்ள நடிகர் பக்ரு, தமிழில் 'அற்புத தீவு', 'தலை எழுத்து', '7ஆம் அறிவு' உள்ளிட்ட படங்களில் நடித்தவர்.
உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவப் பரிசோதனைக்கு சென்ற போதுதான் கிருமித்தொற்று தெரிய வந்ததாம்.
விரைவில் பணிக்குத் திரும்ப இருப்பதாகவும் அனைவரும் கவனமாக இருக்கவேண்டும் என்றும் பக்ரு தெரிவித்துள்ளார்.

