முதல் முறையாக ஒரு முழுநீள நகைச்சுவைப் படத்தில் நடித்துள்ளார் சசிகுமார்.
'எம்.ஜி.ஆர் மகன்' என்ற அந்தப் படம் அனைத்து தரப்பினரையும் மகிழ்விக்கும் என்கிறார்.
தந்தைக்கும் மகனுக்கும் இடையேயான உறவை விவரிக்கும் படம் இது. பொன்ராம் இயக்கி உள்ளார்.
"நானும் சமுத்திரக்கனியும் இணைந்து நடித்தால் ரசிகர்கள் மத்தியில் ஒருவித எதிர்பார்ப்பு இருக்கும். மதுரை புழுதியை அப்பிக்கொண்டு ஆளுக்கொரு கத்தியை இடுப்பில் செருகிக் கொண்டு, கண்ணில் படுபவர்களை எல்லாம் தூக்கிப்போட்டு பந்தாடுகிற படங்கள்தான் எனக்கு அமைந்தன. சமுத்திரக்கனிக்கும் அப்படித்தான்.
"இருவரும் ஒன்று சேர்ந்தால் ஆளுக்கு தலா பத்து அறிவுரைகள் சொல்லாமல் விட மாட்டோம். ஆனால் 'எம்.ஜி.ஆர் மகன்' படத்தில் எங்களுக்கு பலர் அறிவுரை சொல்லி திருத்தப் பார்க்கிற அளவுக்கு எக்குத்தப்பான கதாபாத்திரங்கள் அமைந்துள்ளன.
"அரைக்கால் சட்டை போட்டுக்கொண்டு சமுத்திரக்கனி பல அட்டூழியங்களைச் செய்து ஏச்சுப்பேச்சுக்கு ஆளாவார்," என்கிறார் சசிகுமார்.
சிவகார்த்திகேயனும் சூரியும் கூட்டணி அமைத்து ஒரு படத்தின் குறிப்பிட்ட பகுதியை நிரப்புவதுபோல் தானும் சமுத்திரக்கனியும் கூட்டணி அமைத்திருப்பதாக குறிப்பிடுபவர், வேட்டி உடுத்தாமல் கால்சட்டை அணிந்து சமுத்திரக்கனி சபதம் எடுப்பதுதான் இந்தப் படத்தின் முக்கியமான அம்சம் என்கிறார்.
கதைப்படி, சசியின் பெயர் அன்பளிப்பு ரவியாம். ஊர் தலைவராக இருந்துகொண்டே பல ரகளைகளில் ஈடுபடுவாராம். அந்தக் காட்சிகளை நினைத்தாலே சிரிப்பு வருகிறது என்கிறார்.
'டிக்டாக்' செயலி மூலம் பிரபலமான மிருணாளினி ரவிதான் படத்தின் நாயகி. அறிமுகப் படத்திலேயே அசத்தியிருப்பதாக படக்குழுவினர் பாராட்டுகின்றனர்.
முதன்முறையாக ஜோதிகாவுடன் நடிக்கிறார் சசி. இதிலும் சமுத்திரக்கனியின் பங்களிப்பு உண்டு. இயக்குநர் இரா.சரவணன் இயக்கும் அந்தப் படத்தின் கதை மனதைத் தொட்டதால் நடிக்க ஒப்புக் கொண்டாராம் சசி.
"இரா.சரவணன் இயக்கிய 'கத்துக்குட்டி' படத்தில் நான் நடித்திருக்க வேண்டியது. சூழ்நிலை காரணமாக நடிக்க இயலாமல் போனது. இந்நிலையில் அவர் சொன்ன கதை மனதைத்தொட்டது.
"நானும் ஜோதிகா மேடமும் அண்ணன் தங்கையாக நடிக்கிறோம். அதிரடியான அண்ணன், நேர்மையான கணவர் என எங்கள் இருவரையும் தோளில் தாங்கும் அன்பான சகோதரியாக ஜோதிகா சிறப்பாக நடித்துள்ளார்," என்று சொல்லும் சசிகுமார், திரையுலகில் அறிமுகமாகி 12 ஆண்டுகள் கடந்துவிட்டன.
இந்தப் பயணத்தில் பல ஏற்ற இறக்கங்களைச் சந்தித்துவிட்டதாக குறிப்பிடுபவர், முதன்முறையாக நகைச்சுவைப் படத்தில் நடித்தது நல்ல அனுபவமாக அமைந்தது என்கிறார்.
"நிறைய தலைப்புகளை யோசித்ததில் இந்த 'எம்.ஜி.ஆர் மகன்' மிகப் பொருத்தமாக இருந்தது. அப்பாவுக்கும் மகனுக்குமான உறவுதான் இந்தப் படம். இயக்குநர் பொன்ராம் தனது பாணியில் ஜாலியாக கதை சொல்லியிருக்கிறார்.
"படப்பிடிப்பு இடைவெளியின்போது நான், கனி, நடிகர் சிங்கம் புலி மூவரும் சத்யராஜுடன் பேச உட்கார்ந்துவிடுவோம். அப்போது எம்ஜிஆர் பற்றி பல சுவாரசியமான செய்திகளை சத்யராஜ் சொல்வார். மிக கலகலப்பான மனிதர். இப்போது படப்பிடிப்பு முடிந்த பிறகும்கூட அவ்வப்போது தொடர்புகொண்டு பேசுகிறோம்," என்று சொல்லும் சசிகுமார், அடுத்து 'முந்தானை முடிச்சு' மறுபதிப்பில் கவனம் செலுத்துகிறார்.
இது பாக்யராஜின் படைப்புகளில் முக்கியமான படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும் என்றும், அதனால் கவனத்துடன் படமாக்க வேண்டியிருப்பதாகவும் கூறுகிறார்.
இதுவரை தன்னைப் பற்றி கிசுகிசுக்கள் வராததில் ஆச்சரியம் ஏதுமில்லை என்றும் குறிப்பிடுபவர், எந்த வம்பு தும்புக்கும் போகாமல் இருப்பதே இதற்குக் காரணம் என்கிறார்.
, :
சசிகுமார்

