நல்ல உணவுதான் அழகின் ரகசியம் என்றும் ஆரோக்கியமான உணவை சாப்பிட்டதால்தான் முன்னோர்கள் நீண்ட காலம் நலமாக இருந்ததாகச் சொல்கிறார் நடிகை நிதி அகர்வால்.
நடிகைகளுக்கு அழகு முக்கியம் என்று சொல்பவர்கள் தினமும் உடற்பயிற்சி செய்யவேண்டும் என்றும் சமூக வலைத்தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
உடல்நலம் நன்றாக இருந்தால்தான் மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும் என்று குறிப்பிட்டுள்ள அவர், மகிழ்ச்சிதான் முகத்தை அழகாக காட்டும் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், ஆழ்ந்த தூக்கமும் அழகைப் பேணிக்காக்க அவசியமாகிறது என்கிறார் நிதி அகர்வால்.
"நம் முன்னோர்கள் ஆரோக்கிய உணவை மட்டும் உட்கொண்டனர். அதனால்தான் எண்பது வயதிலும் பல் போகாமலும் பாட்டிகள் கூட தெம்பாக வேலை பார்த்தனர்.
"ஆனால் இப்போதைய நிலைமை மாறிவிட்டது. இன்று இளையர்கள் முதல் பெரியவர்கள் வரை எந்த வேலையையும் அதிகளவில் செய்ய முடியவில்லை," என்கிறார் நிதி.
தாம் சரியான உணவு வகைகளை உரிய நேரத்தில் உட்கொள்வதாக குறிப்பிடுபவர், சில அழகு குறிப்புகளையும் உடல்நலத்துக்கேற்ற உணவுகள் குறித்தும் தமது பதிவில் விவரித்துள்ளார்.
"நம் முன்னோர்களைப் போன்று நானும் உணவுக் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்கிறேன். காலை சிற்றுண்டியாக ஓட்ஸ் மாதிரியான உணவு வகைகளையும் மதிய உணவாக சப்பாத்தி, கொஞ்சம் சோறு, காய்கறிகளையும் சாப்பிடுகிறேன்.
"இரவில் மீன், குறைவான எண்ணெய்யில் வறுத்த காய்கறிகள் சாப்பிடுவது வழக்கம். காரம், மசாலாக்களை அறவே சேர்ப்பதில்லை. எனது சருமம் மினுமினுப்பாக இருப்பதாகச் சொல்கிறார்கள். அதற்காக தயிரில் எலுமிச்சை, தேன் கலந்து முகத்துக்கு பூசி சிறிது நேரத்துக்கு பிறகு வெந்நீரில் கழுவுவேன். அது முகத்தை பொலிவாக காட்டும்," என்கிறார் நிதி அகர்வால்.
நிதி அகர்வால்

