இசையமைப்புப் பணிகளில் மூழ்கி இருக்கும் ஏ.ஆர்.ரகுமான் சொந்தப் படம் தயாரிக்கிறார் என்பது பலருக்கு ஆச்சரியம் அளிக்கும்.
'99 சாங்ஸ்' என்ற தலைப்பில் உருவாகும் படத்தைத் தயாரிப்பதுடன் கதையும் எழுதியுள்ளார் ரகுமான்.
ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி என மும்மொழிகளில் இப்படம் உருவாகி உள்ளது.
இந்நிலையில் கதை எழுதி தயாரிப்பது ஏன் என்பது குறித்து ரகுமான் விளக்கம் அளித்துள்ளார்.
"தமிழகத்தில் பிறந்த எனக்கு வட இந்தியாவிலும் அங்கீகாரம் கிடைத்தது. அதன்பிறகு லண்டனில் 'பாம்பே டிரீம்ஸ்' படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பு அமைந்தது. அப்போது பலரும் படம் எடுக்க கதை இருக்கிறதா? என்று தொடர்ந்து கேட்ட வண்ணம் இருந்தனர்.
"அப்போதுதான் கதை எழுதும் எண்ணம் என்னுள் தோன்றியது. அதற்காக நிறைய கற்கத் தொடங்கினேன்," என்கிறார் ரகுமான்.
கதை எழுதுவது தொடர்பான சில பயிற்சிப் பட்டறைகளிலும் பங்கேற்றாராம். அதன்பிறகு தான் '99 சாங்ஸ்' கதையை எழுதியுள்ளார்.
இந்தப் படத்தை விஸ்வேஸ் கிருஷ்ணமூர்த்தி இயக்க, இஹான் நாயகனாக நடித்துள்ளார்.
இந்நிலையில் '99 சாங்ஸ்' படத்தின் முன்னோட்டக் காட்சித் தொகுப்பு, பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இதில் முன்னணி இசையமைப்பாளர்கள் யுவன் சங்கர் ராஜா, அனிருத், ஜி.வி.பிரகாஷ், முன்னணி நடிகர்கள் சிவகார்த்திகேயன், எஸ்.ஜே.சூர்யா, இயக்குநர்கள் சங்கர், கவுதம் மேனன், கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் பேசிய ஏ.ஆர். ரகுமான், இளம் தலைமுறையினரிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.
நடிகர் எஸ்.ஜே.சூர்யா பேசுகையில், ரகுமானுடன் இணைந்து பணிபுரியும் வாய்ப்பு கிடைத்திருப்பதே பெரும் பாக்கியம் என்று குறிப்பிட்டார்.
"சினிமாவில் என்ன சாதித்தோம் என்று யோசித்தால் அவருடன் பணியாற்றியதையே ஒரு சாதனையாகத்தான் கருதுகிறேன். அவருடன் பணிபுரியும்போது பல விஷயங்களை நமக்குச் சொல்லாமலே சொல்லித் தருவார்.
"அவருடைய நடத்தையே நம்மைக் கட்டுப்படுத்தும். அவர் கூறும் ஒரு வார்த்தையே பல அர்த்தங்கள் கொண்டதாக இருக்கும். மிகவும் தூய மனம் கொண்டவர்.
"ரகுமான் ஓர் உயர்வான ஆத்மா என்பேன். அதனால் அவரது படைப்புகளும் சிறப்பாக அமைகின்றன. அவருடைய இசையைப் போலவே இந்தப் படமும் உலகமெங்கும் செல்லும் என நம்புகிறேன்," என்றார் எஸ்.ஜே.சூர்யா.
ரகுமானின் புதிய முயற்சி இளம் தலைமுறையினருக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் இருப்பதாக இசையமைப்பாளர் அனிருத் குறிப்பிட்டார்.
சிறு வயதில் தாமும் நண்பர்களும் ரகுமானின் இசையை நேசிக்கும் வெறியர்களாக இருந்ததாக அவர் கூறினார்.
"சிறு வயதில் எனக்கும் எனது நண்பன் லியோனுக்கும் ரகுமான் சார் ஒரு கீ போர்ட் பரிசளித்தார். உண்மையில் நான் இசையைத் தேர்ந்தெடுக்க அதுதான் முக்கிய காரணமாக அமைந்தது," என்றார் அனிருத்.
"நான் சிறுவயதில் முதன்முதலாகக் கேட்க ஆரம்பித்தது 'காதலன்' படத்தின் பாடல்கள்தான். எனக்கு முதல் ஊக்கமாக அப்பாடல்கள் அமைந்தன. பள்ளிக்காலங்களில் நானும் எனது நண்பர்கள் அனைவரும் ரகுமானின் வெறியர்களாக இருந்தோம்.
"அவரது பாடல் கேசட் வெளியானதும் முதல் நாளே எப்படியாவது போய் வாங்கிவிடுவோம். இந்த அனுபவம் எனக்கு மட்டுமல்ல, இசை ரசிகர்கள் பலருக்கும் இருந்திருக்கும் என நிச்சயம் நம்புகிறேன்," என்று அனிருத் மேலும் தெரிவித்தார்.
'99 சாங்ஸ்' பட பாடல் வெளியீட்டு விழாவில் இயக்குநர் கௌதம் மேனன், நடிகர் சிவகார்த்திகேயன், ஏ.ஆர். ரகுமான், எஸ்.ஜே.சூர்யா.

