விஜய் சேதுபதியைப் போல் திறமையான நடிகர்கள் கிடைப்பது அரிதானது. அதைவிட மிகப்பெரிய புகழை அடைந்தபோதும் அவரைப் போல் அடக்கமாக இருப்பது பெரிய விஷயம் என்கிறார் இளம்நாயகி கிருத்தி ஷெட்டி.
தமிழ் ரசிகர்களுக்கு இவரைப் பற்றி அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இப்போதுதான் தெலுங்கு தேசத்தில் அறிமுகமாகி ரசிகர்களைக் கவர்ந்துள்ளார்.
மிக விரைவில் லிங்குசாமி இயக்கும் தமிழ்ப் படத்தில் ஒப்பந்தமாகி உள்ளாராம். 'உப்பெணா' என்ற தெலுங்குப் படத்தில்தான் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்திருக்கிறார் கிருத்தி.
"விஜய் சேதுபதி சார் மிகவும் வெளிப்படையாகப் பேசக்கூடியவர். ஒவ்வொரு காட்சியிலும் தனி முத்திரை பதித்து விடுகிறார். உடன் இருப்பவர்கள் எவ்வளவு சிறப்பாக நடித்தாலும் அதை ஒரே ஒரு முகபாவத்தில் மிஞ்சி விடுகிறார்.
"சிரஞ்சீவி சார் கூட அவரைப் பற்றிப் பேசினார். 'மாஸ்டர்' படத்தில் பவானி கதாபாத்திரத்தில் சேதுபதி நடித்திருந்தது எனக்கு ரொம்ப பிடித்திருந்தது என்றார் சிரஞ்சீவி சார். நானும் 'மாஸ்டர்' படம் பார்த்து பிரமித்தேன்," என்கிறார் கிருத்தி ஷெட்டி.
மீண்டும் சேதுபதியுடன் இணைந்து நடிக்க ஆவலுடன் காத்திருப்பதாக சொல்பவர், தெலுங்கில் ராம்சரணுடன் நடிக்க விரும்புகிறாராம். தமிழில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடிக்க விரும்புகிறார்.
இவர் பிறந்தது கர்நாடகாவின் மங்களூரு நகரில் என்றாலும் வளர்ந்தது, படித்தது எல்லாம் மும்பையில்தானாம். மனோதத்துவ துறையில் பட்டப்படிப்பை மேற்கொண்டுள்ளார். மருத்துவராகி ஏழைகளுக்கு உதவவேண்டும் என்பதே கிருத்தியின் லட்சியமாக இருந்துள்ளது.
"படிக்கும்போது மாடலிங் துறையில் வாய்ப்புகள் கிடைத்தன. சில விளம்பரங்களில் நடித்துள்ளேன். அதன் மூலம்தான் 'உப்பெணா' பட வாய்ப்பு தேடிவந்தது. எனக்கு முன்பு குறைந்தபட்சம் சில நூறு பேர்களைப் பார்த்து நிராகரித்துவிட்டனராம்," என்று சொல்லும் கிருத்திக்கு 'உப்பெணா'வில் நடிக்கும் வரை தெலுங்கு தெரியாது. படப்பிடிப்பின்போது மிக வேகமாக கற்றுத்தேர்ந்து அசத்தியுள்ளார்.
மொழி தெரிந்து நடித்தால்தான் சிறப்பாக நடிக்கமுடியும் என்பதால் மெனக்கெட்டு தெலுங்கில் பேச கற்றுக்கொண்டாராம்.
"என்னை அழகு தேவதை என ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் குறிப்பிடுகிறார்கள். இதனால் அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமாகி உள்ளேன். நாணி, சுதிர்பாபுவின் படங்கள் தவிர லிங்குசாமி சார் தெலுங்கில் இயக்கும் படத்திலும் நடித்து வருகிறேன். மேலும் லிங்குசாமி இயக்கத்திலேயே தமிழிலும் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்துள்ளது," என்கிறார் கிருத்தி.
கிருத்தி ஷெட்டி

