திரைத் துளிகள்

திரைத் துளிகள்

2 mins read
d71c5a4b-600a-4711-835d-a0c840b72cc5
-
multi-img1 of 3

சவாலில் வெற்றி பெற்ற ராஷ்மிகா

தாம் யாரையும் காதலிக்கவில்லை என்றும் ஒப்புக்கொண்ட படங்களில் நடிப்பதற்கே தமக்கு நேரம் போதவில்லை என்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா கூறியுள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு மும்பையில் உள்ள உணவகம் ஒன்றுக்கு ராஷ்மிகாவும் தெலுங்கு நாயகன் விஜய் தேவரகொண்டாவும் வருகை புரிந்தனர். அப்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டன.

இதனால் இருவரும் காதலிப்பதாக தகவல் பரவியது. இதையடுத்தே தமது விளக்கத்தை அளித்துள்ளார் ராஷ்மிகா.

இந்நிலையில் தெலுங்கு நடிகர் பிரதீப் உடற்பயிற்சி தொடர்பான ஒரு காணொளியை வெளியிட்டு தன்னைப் போலவே உடற்பயிற்சி செய்யமுடியுமா என சிலருக்கு சவால் விடுத்துள்ளார்.

இந்தச் சவாலை ஏற்றுக்கொண்ட ராஷ்மிகா பிரதீப்பை போலவே உடற்பயிற்சி செய்து அசத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் காணொளி ஒன்றை வெளியிட, லட்சக்கணக்கான ரசிகர்கள் அதைப் பார்த்து ராஷ்மிகாவுக்குப் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

'அஜித் ரசிகர்களை திருப்திபடுத்தும்'

எதிர்வரும் மே முதல் தேதி தமது ஐம்பதாவது பிறந்தநாளை கொண்டாட உள்ளார் அஜித்.

அன்றைய தினம் 'வலிமை' படம் குறித்து பல முக்கியத் தகவல்களை வெளியிட உள்ளனர்.

குறிப்பாக, படத்தின் பாடல் வெளியீடு குறித்தும் ரசிகர்களுக்கு அஜித் விடுக்கும் செய்தி குறித்தும் சில அறிவிப்புகள் வெளியாகுமாம்.

தாம் அவ்வப்போது 'வலிமை' படப்பிடிப்புக்குச் சென்றதாகவும் அப்போது படமாக்கப்பட்ட காட்சிகளைக் கண்டு திருப்தி அடைந்ததாகவும் தெரிவித்துள்ளார் தயாரிப்பாளர் போனி கபூர்.

இந்தப் படம் ரசிகர்களை அனைத்து வகையிலும் திருப்திப்படுத்தும் என நம்புவதாகவும் சொல்கிறார்.

"பைக் துரத்தல், சண்டைக் காட்சிகளில் டூப் போடாமல் நடித்துள்ளார் அஜித். அவரது ரசிகர்களைக் கவரும் வகையிலான குடும்பக் கதையும் அழுத்தமான அதிரடி சண்டைக் காட்சிகளும் இப்படத்தில் உள்ளன. 'வலிமை'யை வட இந்தியாவிலும் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறோம்," என்கிறார் தயாரிப்பாளர் போனி கபூர்.

'அந்த ரசிகர்களுக்காக நடிக்கிறேன்'

தென்னிந்திய சினிமா ரசிகர்களின் வாழ்க்கையில் சினிமா என்பது தவிர்க்க முடியாத ஓர் அங்கமாக மாறிவிட்டது என்கிறார் தமன்னா.

இதுதான் அந்த ரசிகர்களை நினைத்து தாம் மிகவும் ஆச்சரியப்படும் விஷயம் என்றும் சமூக வலைத்தளம் ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

"முன்னணி நடிகர் நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள், தென்னிந்திய ரசிகர்களின் அன்றாட வாழ்க்கையில் ஓர் அங்கமாக உள்ளனர். அதனால்தான் தென்னிந்திய மொழிகளில் நடிக்க அதிக ஆர்வம் காட்டுகிறேன்.

"அந்த ரசிகர்களுக்குப் பிடிக்கும் என்பதால்தான் வணிகப் படங்களிலும் அதிக அளவில் நடிக்கிறேன்," என்று சொல்லும் தமன்னா அடுத்து தனுஷுடன் ஒரு படத்தில் ஜோடி சேர்ந்துள்ளார். தவிர, இந்தியில் ஒன்று, தெலுங்கில் மூன்று படங்களில் நடித்து வருகிறார். அண்மையில் கொரோனா கிருமித்தொற்றில் இருந்து மீண்டுள்ள தமன்னா உடற்பயிற்சியில் தீவிர கவனம் செலுத்துகிறார்.