மலையாளத் திரையுலகின் முன்னணி நாயகனான மோகன்லால் இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார்.
இதில் அஜித் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.
350க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து முடித்துள்ள மோகன்லால், 'பரோஸ் - நிதி காக்கும் பூதம்- 3டி' என்ற தலைப்பில் படம் இயக்குகிறார்.
இப்படத்தின் மற்றொரு சிறப்பம்சம் தமிழகத்தைச் சேர்ந்த 15 வயதே ஆன சிறுவன் லிடியன் நாதஸ்வரம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
'மை டியர் குட்டிச்சாத்தான்- 3டி' படத்தை இயக்கிய ஜிஜோ புன்னூஸ், இப்படத்தின் திரைக்கதையை எழுதியிருப்பதாகவும் முதலில் அவர்தான் இப்படத்தை இயக்குவதாக இருந்தது என்றும் மோகன்லால் கூறியுள்ளார்.
சூழ்நிலை காரணமாக கடைசியில் மோகன்லாலே இயக்குநர் ஆகியுள்ளார். இப்படத்தில் வெளிநாட்டுக் கலைஞர்கள் பலர் பணியாற்ற உள்ளனர். மலையாள நடிகர் பிரித்விராஜ் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார்.
இந்நிலையில் மற்றொரு கதாபாத்திரத்தில் நடிக்குமாறு அஜித்திடம் வேண்டுகோள் விடுத்தாராம் மோகன்லால்.
அவரே நேரடியாகத் தொடர்பு கொண்டு பேசியதால் மறுக்க இயலாமல் இப்படத்தில் நடிக்க அஜித் ஒப்புக்கொண்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
எனினும் அவர் ஏற்கப் போகும் கதாபாத்திரம் எப்படிப்பட்டது என்பது தெரியவில்லை. அவர் வில்லனாகவோ நாயகனின் நண்பராகவோ நடிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தில் பணியாற்றும் மற்ற கலைஞர்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

