தெலுங்கில் கால்பதிக்கும் ஐஸ்வர்யா
தமிழுக்கு அடுத்தபடியாக தெலுங்கிலும் நாயகியாக ஒப்பந்தமாகி உள்ளார் ஐஸ்வர்யா மேனன்.
'வீரா', 'தமிழ்ப்படம்-2', 'நான் சிரித்தால் தீபாவளி' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இவரை சமூக வலைத்தளங்களில் ஏராளமானோர் பின்தொடர்கின்றனர்.
தமிழில் எதிர்பார்த்த நல்ல கதைகள் அமையாததால் தெலுங்கில் நடிக்க முயற்சி செய்து வந்த ஐஸ்வர்யாவுக்கு இப்போதுதான் அதிர்ஷ்டம் கைகூடியுள்ளது.
பிரபல தெலுங்கு நாயகன் ரவி தேஜாவின் அடுத்த படத்தில் இவர்தான் கதாநாயகி. இவரைத் தவிர இன்னொரு நாயகியும் படத்தில் உள்ளார். எனினும் ஐஸ்வர்யாவுக்குத்தான் முக்கியத்துவம் அதிகமாம்.
"தெலுங்குப் படத்தில் ஒப்பந்தமான நிலையில் தமிழிலும் ஒரு படத்தில் நடிக்க முடிவு செய்திருக்கிறேன். இந்தாண்டு எனது திரைப்பயணம் சிறப்பாக இருக்கும் என நம்புகிறேன்," என்கிறார் ஐஸ்வர்யா மேனன்.
ராமராஜன்: சேதுபதிக்கு ஏற்ற கதை
விஜய் சேதுபதிக்காக ஒரு கதையை தயார் செய்திருப்பதாகச் சொல்கிறார் நடிகரும் இயக்குநருமான ராமராஜன்.
1980களில் முன்னணி நடிகராக வலம்வந்த அவர் ஐந்து படங்களை இயக்கியதுடன் 44 படங்களில் நாயகனாகவும் நடித்துள்ளார். இந்நிலையில் தனது ஐம்பதாவது படம் சிறப்பான படைப்பாக உருவாக வேண்டும் என விரும்புகிறாராம்.
"நான் பணியாற்றிய 49 படங்களும் பெண்களுக்கு மரியாதை கொடுக்கும் கதையம்சம் கொண்டதாகவே இருந்தன. எனது 50ஆவது படமும் அப்படிப்பட்டதாகவே இருக்கும். கோடிக்கணக்கில் பணம் கொடுத்தாலும் பெண்களுக்கு எதிராக படமெடுக்க மாட்டேன்.
"நான் இப்போது உருவாக்கியுள்ள கதை விஜய் சேதுபதிக்கு பொருத்தமாக இருக்கும். எனவே அவர் நடித்தால் மகிழ்ச்சி அடைவேன். மேலும் சில கதைகளும் என்னிடம் உள்ளன," என்று ராமராஜன் தெரிவித்துள்ளார்.

