'மோகன்தாஸ்', 'எஃப்.ஐ.ஆர்' என ஒரே சமயத்தில் இரண்டு படங்களைத் தயாரித்து நாயகனாக நடித்து வருகிறார் விஷ்ணு விஷால்.
அண்மைய பேட்டி ஒன்றில் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விஷயங்களைத் தவிர்த்துவிட்டு திரையுலகம் சார்ந்த விஷயங்கள் குறித்து மட்டும் அவர் விரிவாகப் பேசியுள்ளார்.
'மோகன்தாஸ்' என்ற பெயர் உடையவர்கள் எல்லாம் மகாத்மா காந்தி ஆகிவிட முடியாது. என்பதுதான் அப்படத்தின் ஒருவரிக் கதையாம். சைக்கோ போன்ற ஒரு மனநோயாளியை மையமாக வைத்து ஒரு கொலை குறித்த விசாரணை எப்படி நடக்கும் என்பதை இப்படம் விவரிக்கிறது.
"ராட்சசன்' படத்தில் நாயகனாக நடித்து வெற்றி பெற்றேன். இந்தப் புதிய படத்தில் நானே ராட்சசன் ஆகிவிட்டேன். புரியவில்லை... இதில் எதிர்மறை கதாபாத்திரத்தை ஏற்றுள்ளேன்," என்று சொல்லிச் சிரிப்பவர், 'எஃப்.ஐ.ஆர்' படம் இதுவரை தாம் நடித்த படங்களில் மிகச்சிறந்த படைப்பாக உருவாகி வருவதாகச் சொல்கிறார்.
"பொதுவாக உண்மைக் கதையை அடிப்படையாக கொண்டு உருவாகும் படங்களை நான் விரும்புவேன். 'எஃப்.ஐ.ஆர்' அத்தகைய உண்மைக் கதைகளைத் தாங்கி வரும் படம்.
"தவறாகக் குற்றம்சாட்டப்பட்ட ஓர் இஸ்லாமிய இளைஞன் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் போராட்டங்களை விவரிக்கும் கதை இது. என்னுடைய மிக நெருக்கமான நண்பர் இஸ்லாமியர். எனவே, இந்தப் படத்தை அவருக்கு அர்ப்பணிக்கிறேன்.
"இஸ்லாமிய சமூகம் குறித்து சமூகத்தில் ஒரு தவறான எண்ணம் நிலவி வருகிறது. அதை இந்தப் படம் விவரிக்கும். அண்மைக் காலமாக இஸ்லாம் குறித்தும் தீவிரவாதம் குறித்தும் விவரிக்கக்கூடிய படங்கள் தொடர்ந்து வெளியாகின்றன. 'எஃப்.ஐ.ஆர்' எந்தக் குறிப்பிட்ட சமூகத்தினரின் மனதையும் காயப்படுத்தாது. உண்மையையும் யதார்த்தத்தையும் மட்டுமே வெளிப்படுத்தும்," என்று உறுதியளிக்கிறார் விஷ்ணு விஷால்.
தமது இரண்டு தயாரிப்புகளும் திரையரங்கில் வெளியீடு காணவேண்டும் என்பதுதான் விஷ்ணு விஷாலின் ஆசையாக உள்ளது.
"நேரடியாக இணையத்தில் வெளியிடும்படி பல்வேறுவிதமான தூண்டுதல்கள் நிகழ்கின்றன. எனினும் திரையரங்குகளில் ஒன்றுகூடி ரசிகர்கள் கொடுத்த ஆதரவால்தான் நான் இன்று இந்த நிலைமையில் இருக்கிறேன். எனவே, எனது படங்கள் பெரிய திரையில் வெளியீடு காண்பதையே விரும்புகிறேன்.
"எனக்கென்று ஒரு சக்தி இருக்கிறது. அதை வைத்து என்னால் இயன்றவரை முயற்சி செய்து இரு படங்களையும் திரையரங்கில் வெளியீடு காண வைப்பேன்," என்று திட்டவட்டமாகவும் எதிர்பார்ப்புகளுடனும் பேசுகிறார் விஷ்ணு விஷால்.
இவரது நடிப்பில் அண்மையில் வெளியான படம் 'காடன்'. கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ள இப்படத்தில் ராணா டகுபதி நாயகனாகவும் முக்கியமான குணசித்திர வேடத்தில் விஷ்ணுவும் நடித்துள்ளனர்.
"குணசித்திர வேடத்தில் நடிக்கச் சம்மதிப்பேனா எனும் சந்தேகம் இயக்குநர் பிரபு சாலமன் சாருக்கும் இருந்ததாம். ஆனால் கதையைக் கேட்ட உடனேயே நான் நடிக்க ஒப்புக்கொண்டதும் ஆச்சரியப்பட்டார். என்னைப் பொறுத்தவரை நல்ல படங்களில் எனது பங்களிப்பு இருக்கவேண்டும்.
"2013ஆம் ஆண்டு வெளியான 'இடம், பொருள் ஏவல்' படத்துக்குப்பிறகு இப்படியொரு முடிவை எடுத்துச் செயல்படுத்தி வருகிறேன். அதேபோல் பல திறமையான கலைஞர்களுடன் ஒரே படத்தில் நடிக்கவும் தயங்கியதில்லை.
"எதுவாக இருப்பினும் நான்தான் கதாநாயகன் என்று எனக்குள்ளே சொல்லிக் கொள்வேன். 'நீர்ப்பறவை' படத்தில் நந்திதா தாஸ், சுனைனா, சமுத்திரக்கனி என திறமைவாய்ந்த பலருடன் இணைந்து நடித்தேன். இருப்பினும் எனது கதாபாத்திரம் தனித்துவமானதாக ரசிகர்களால் பாராட்டப்பட்டது.
"இதையெல்லாம் யோசித்துதான் படங்களைத் தேர்வு செய்கிறேன்," என்கிறார் விஷ்ணு விஷால்.

