ரசிகருக்கு பதிலடி தந்த பிரியாமணி
சமூக வலைத்தளத்தில் தன்னைக் கிண்டலடித்த, ரசிகருக்கு பதிலடி கொடுத்துள்ளார் பிரியாமணி.
திருமணத்துக்குப் பிறகு தொடர்ந்து நடித்துவரும் அவர் அண்மையில் சமூக வலைத்தளங்களில் தமது கவர்ச்சிப் படங்கள் சிலவற்றை வெளியிட்டி ருந்தார்.
அவற்றைக் கண்டு ஏராளமானோர் அவர் மிக அழகாக இருப்பதாகப் பின்னூட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் குறும்புக்கார ரசிகர் ஒருவர் தம்மைத் திருமணம் செய்து கொள்ள சம்மதமா என்று கேள்வி எழுப்ப, அதற்கு கோபப்படாமல் பதிலளித்துள்ளார் பிரியாமணி.
"எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. என் கணவரிடம் கலந்து பேசி அனுமதி பெறுங்கள். அது நடந்தால் நான் உங்களைத் திருமணம் செய்துகொள்கிறேன்," என்று பதிலடி தந்துள்ளார் பிரியாமணி.
தோசை கேட்கும் ஷ்ருதி ரசிகர்கள்
கொரோனா விவகாரத்தை கடந்து திரையுலகத்தினர் மீண்டும் சினிமா பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
எனினும் ஊரடங்கின் போது செயல்பட்டது போலவே சமூக வலைத்தளங்களில் பதிவிடுவது, காணொளிகளை வெளியிடுவது என்று பரபரப்பாக உள்ளனர்.
அந்த வகையில் ஷ்ருதிஹாசன் வீட்டில் தாம் தோசை சுடும் காட்சியைப் படம்பிடித்து பதிவிட்டுள்ளார்.
இதைப் பார்த்த ரசிகர்கள் தங்களுக்கும் தோசை வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து, பல வகையான தோசைகளின் பெயர்களை தங்களது பின்னூட்டத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
ரசிகர்களுடன் இவ்வாறு கலந்துரையாடுவதும் கருத்துகளைப் பகிர்ந்துகொள்வதும் தமக்கு உற்சாகம் அளிப்பதாகச் சொல்கிறார் ஷ்ருதி. இவரது நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் 'லாபம்'. இதை அண்மையில் காலமான இயக்குநர் ஜனநாதன் இயக்கியுள்ளார்.

