விஜய் முதல் சிவகார்த்திகேயன் வரை முன்னணி நடிகர்கள் அறிமுக இயக்குநர்களின் படங்களில் நடிக்க விரும்புகிறார்கள்.
காரணம் அண்மைய சில ஆண்டுகளில் எடுத்த எடுப்பிலேயே பெரும் வசூல் கண்ட படைப்புகளை புது இயக்குநர்கள் தந்துள்ளனர்.
அத்தகையவர்களின் அடுத்தடுத்த படைப்புகள் மேலும் கூடுதல் எதிர்பார்ப்பில் மின்னும். எனினும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சில இயக்குநர்கள் இன்னும் அடுத்த படம் குறித்து அறிவிப்பு வெளியிடவில்லை. அவர்களில் சிலர் இப்போது என்ன செய்கிறார்கள்?
'டோரா' தாஸ் ராமசாமி
நயன்தாரா நடித்து தாஸ் ராமசாமி இயக்கிய 'டோரா' ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. அடுத்த படத்தை இயக்குவார் என்று பார்த்தால் 'மிடில் கிளாஸ்' படத்தின் மூலம் தயாரிப்பாளராகிவிட்டார்.
"அடுத்து வணிக அம்சங்கள் நிறைந்த ஒரு கதையை தயார் செய்துள்ளேன். இயக்குநர்கள் 'கில்லி' தரணி, லிங்குசாமி பாணியில் கதை சொல்பவர்கள் குறைந்துவிட்டனர்.
"எனவே அவர்களது வழியைப் பின்பற்றி கதையை உருவாக்கி இருக்கிறேன். நான்கு சண்டைக் காட்சிகள், ஐந்து பாடல்கள் என்று உருவான கதையில் கதாநாயகன் கொஞ்சம் அப்பாவியாக இருப்பார்.
"பெரிய நாயகனை மனதில் வைத்து எழுதிய இந்தக் கதையை தயாரிப்பு நிறுவனம் ஏற்றுக்கொள்ளும் என நம்புகிறேன்," என்கிறார் தாஸ் ராமசாமி.
'பாம்பு சட்டை' ஆடம் தாசன்
'துன்பச் சூழலிலும் எளிய மனிதர்கள் தரம் தாழ்ந்துவிட மாட்டார்கள்' என்ற கருத்தை தனது முதல் படத்திலேயே ஆழமாக விதைத்தவர் ஆடம் தாசன்.
பாபி சிம்ஹா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான 'பாம்பு சட்டை'யைப் பார்த்துவிட்டு காவலாளிகளாக, தொழிலாளர்களாக உள்ள அறிமுகமற்றவர்கள் கூட தம்மை நெகிழ்ந்து பாராட்டியதாகச் சொல்கிறார் ஆடம் தாசன்.
"தற்போது இரண்டு கதைகளை தயார் செய்துள்ளேன். அதில் பெண் கதாபாத்திரத்தை மையமாக வைத்து உருவான கதை முதலில் படமாக்கப்பட வாய்ப்புண்டு," என்கிறார் ஆடம் தாசன்.
'நிசப்தம்' மைக்கேல் அருண்
நடுத்தர வர்க்க குடும்பத்தின் பெண் குழந்தைக்கு நேரும் பாலியல் வன்முறையை இதயம் பதைபதைக்க எடுத்துச் சொன்ன படம் மைக்கேல் அருண் இயக்கிய 'நிசப்தம்'. அடுத்து மாறுபட்ட கதையுடன் களமிறங்குகிறாராம்.
"நல்ல காதல் கதையைச் சொல்லப் போகிறேன். இம்முறை பெரிய நடிகர், நடிகைகளை நடிக்க வைக்கத்திட்டம்," என்கிறார் மைக்கேல்.
'ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்' ஆறுமுககுமார்
"என் முதல் படத்தை குழந்தைகள்கூட ரசித்துப் பார்த்தனர். அடுத்த படத்திற்கான கதையை விஜய் சேதுபதியை மனதில் வைத்து எழுதியிருக்கிறேன்," என்கிறார் 'ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்' இயக்குநர் ஆறுமுககுமார்.
விஜய் சேதுபதிக்கு கதை பிடித்துவிட்டதாம். விரைவில் அறிவிப்பு வெளியாகக்கூடும்.
'பீச்சாங்கை' அசோக்
'பீச்சாங்கை' படத்துக்கு விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து ஐந்து கதைகளைத் தயார் செய்திருப்பதாகச் சொல்கிறார் அசோக்.
"ஒரு கதையைப் படமாக்கும் உரிமையை ஏற்கெனவே ஒரு தயாரிப்பாளரிடம் விற்றுவிட்டேன். தற்போது திகில், நகைச்சுவை என ஒவ்வொரு அம்சத்துக்கும் ஒரு கதை தயாராக உள்ளது.
"மேலும் ஜோதிகாவுக்கு ஏற்ற ஒரு திகில் கதையையும் உருவாக்கி உள்ளேன். எது முதலில் படமாகும் என்பது சூழ்நிலையைப் பொறுத்து முடிவாகும்," என்கிறார் அசோக்.
'காளிதாஸ்' ஸ்ரீசெந்தில்
பரத் மீண்டும் கோடம்பாக்கத்தில் வெற்றி வலம்வர கைகொடுத்த படம் 'காளிதாஸ்'.
இரண்டு கொலைச் சம்பவங்கள் குறித்து நடக்கும் விசாரணையை விவரிக்கும் கதை ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து 'கைதி' படத்தை வெளியிட்ட நிறுவனம், ஸ்ரீசெந்திலை வைத்து படம் தயாரிக்கிறது.
"கதை தயாராகிவிட்டது. நாயகன் யார் என்பது முடிவாகவில்லை. அது முடிவு செய்யப்பட்டதும் அறிவிப்பு வெளியாகும்," என்கிறார் ஸ்ரீசெந்தில்.