நடிகர் மாதவன் திரைக்கதை எழுதி, இயக்கி, தயாரித்துள்ள படம் 'ராக்கெட்ரி'. படத்தின் நாயகனும் அவர்தான்.
இது இந்திய விண்வெளி ஆய்வுக்கழகத்தின் விஞ்ஞானியான நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகி உள்ள படம்.
நம்பி நாராயணனாக மாதவன் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருக்கிறார்.
கடந்த 1994ஆம் ஆண்டு ராக்கெட் தயாரிப்பு தொடர்பான ரகசியங்களை வெளிநாடுகளுக்கு விற்றதாக விஞ்ஞானி நம்பி நாராயணன் மீது குற்றம்சாட்டப்பட்டது. அதன் பேரில் அவர் கைதானார்.
எனினும் பின்னர் நடைபெற்ற விசாரணைகளின் முடிவில் அவர் எந்தக் குற்றமும் செய்யவில்லை என நிரூபணமானது. இதையடுத்து அவர் விடுதலை செய்யப்பட்டார்.
அவரது வாழ்க்கையில் நிகழ்ந்த பல்வேறு சம்பவங்களை அடிப்படையாக வைத்து இப்படத்தின் திரைக்கதையை எழுதி உள்ளார் மாதவன். நடிகர்கள் சூர்யா, ஷாருக்கான் கௌரவ வேடத்தில் நடித்துள்ளனர். சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். இப்படத்தின் முன்னோட்டக் காட்சித்தொகுப்பு நேற்று முன்தினம் வெளியானது. நடிகர் சூர்யா அத்தொகுப்பை வெளியிட்டு மாதவனைப் பாராட்டிப் பேசினார்.
தனக்கும் இப்படத்தில் ஓர் அங்கமாக இருக்க வாய்ப்பளித்த மாதவனுக்கு நன்றி தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
"ஒரு நாயை அழிக்க அதற்கு வெறிநாய்னு பட்டம் கட்டினாலே போதும். அதுபோல ஒரு மனுஷனை தலைதூக்க முடியாத அளவுக்கு அடிச்சிக் கொல்லணும்னா... அவனுக்கு தேச துரோகின்னு பட்டம் கொடுத்தா போதும்," என இப்படத்தில் சூர்யா பேசும் வசனங்கள் முன்னோட்டத்தில் இடம்பெற்றுள்ளன. அவற்றுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

