'பாகுபலி' பிரபாஸ் ஜோடியாக 'ராதே ஷ்யாம்' படத்தில் நடித்து முடித்துள்ளார் பூஜா ஹெக்டே.
ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி என மும்மொழிகளில் உருவாகும் படம் இது. இந்நிலையில் 'தளபதி 65' படத்திலும் பூஜாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். இதனால் இரட்டிப்பு உற்சாகத்தில் மிதக்கிறார்.
"கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் நடிக்கிறேன். உலகமே தமிழ் சினிமா உலகின் படைப்புகளை ஆர்வமாகப் பார்த்து வரவேற்கும் நிலையில் விஜய்யுடன் இணைந்து நடிக்க கசக்கவா செய்யும்?
"முதல் கட்டப் படப்பிடிப்பு தொடங்கிவிட்டாலும் எனக்கான காட்சிகள் இப்போது எடுக்கப்படவில்லை. இரண்டு அல்லது மூன்றாம் கட்டப் படப்பிடிப்பில்தான் நான் பங்கேற்பேன்," என்கிறார் பூஜா.
தமிழில் ஏற்கெனவே 'முகமூடி' படத்தில் நடித்துள்ளார் இவர். இம்முறை விஜய் படத்துக்கான கதையைக் கேட்டவுடனேயே நடிக்கவேண்டும் எனும் ஆர்வம் மனதில் மேலோங்கியதாகச் சொல்கிறார்.
"உண்மையில் இப்படியொரு வாய்ப்பு கிடைத்ததில் வானத்தில் பறப்பதுபோல் உணர்கிறேன். இயக்குநர் நெல்சன் கதையை விவரித்தபோதே சுவாரசியமாக இருந்தது. இப்படிப்பட்ட கதையையும் விஜய்யுடன் ஜோடி சேர்வதற்கான நல்ல வாய்ப்பையும் இழந்துவிடக்கூடாது என கதை கேட்டு முடித்த அந்த நொடியே முடிவெடுத்து விட்டேன்.
"ரசிகர்கள் இப்படத்தைக் கொண்டாடி தீர்ப்பார்கள். அப்படியொரு ஜனரஞ்சகமான வணிக அம்சங்கள் நிறைந்த கதை. இந்தப் படத்திலும் நான் அழகாகத் தெரிவேன். காரணம் 'ராதே ஷ்யாம்' படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா சார்தான் 'தளபதி 65'க்கும் ஒளிப்பதிவாளர்," என்று உறசாகத்துடன் பேசுகிறார் பூஜா ஹெக்டே.
நடிகையாக ஆகாமல் இருந்திருந்தால் பயணம் சார்ந்த துறைகளில் பணியாற்றி இருப்பாராம். ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பது தமக்குப் பிடிக்காது என்கிறார்.
மாடலிங், விளம்பரத் துறைகளிலும் மிகுந்த ஆர்வம் உண்டாம். உலகின் மற்ற எந்தப் பகுதியையும் விட மும்பையில் உள்ள தனது வீடுதான் சொர்க்கம் என்று சொல்பவர், ஓய்வெடுக்க வேண்டும் என்று முடிவெடுத்தால் பாலி தீவுக்குப் பறந்து விடுகிறார்.
தாமே இரவு உணவைச் சமைத்து சாப்பிடுவதில் ஆர்வம் கொண்டுள்ள பூஜா, மெழுகுவர்த்தி வெளிச்சத்துக்கு மத்தியில் இரவு உணவை சுவைப்பது அலாதியான இன்பம் தரும் அனுபவம் என விவரிக்கிறார்.
"'ராதே ஷ்யாம்' படம் எதிர்பார்த்ததைவிட மிக நல்ல படமாக உருவாகி உள்ளது. கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில்தான் படப்பிடிப்பை நடத்தினார்கள். படக்குழுவில் இருந்த எல்லோருமே எந்நேரமும் முகக்கவசம் அணிந்திருந்தோம். தினமும் நான்கைந்து முறையாவது உடல் வெப்பத்தைப் பரிசோதிப்பார்கள்.
"இப்படிப்பட்ட கடுமையான விதிமுறைகளுக்கு மத்தியில் கடினமான காலகட்டத்தில் பணியாற்றியதை நினைத்துப் பெருமைப்படுகிறேன்," என்று சொல்லும் பூஜா 'ராதே ஷ்யாம்' அனைத்து மொழி ரசிகர்களிடம் இருந்தும் தமக்குப் பாராட்டுகளைப் பெற்றுத் தரும் என நம்புகிறார்.
பட நாயகன் பிரபாசும் தயாரிப்பாளரும் நெருங்கிய நண்பர்களாம். அதனால் படப்பிடிப்புத் தளம் எந்நேரமும் கலகலப்பாக இருக்குமாம்.
"பிரபாசை பொறுத்தவரை எப்போதுமே வேடிக்கையாகவும் உற்சாகமாகவும் பேசக்கூடியவர். அவருடன் பேசினால் பொழுது போவதே தெரியாது. அல்லு அர்ஜுனுடன் நடித்த 'அலவைகுந்தபுரம்லு' படம் வாழ்க்கையில் மறக்க முடியாதது. மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்து ரசிகர்களிடம் எனக்குப் பெயர் வாங்கித் தந்துள்ளது.
"இந்தப் படத்தைப் பார்த்த ரசிகர்களில் பெரும்பாலானோர் அதில் நான் ஏற்று நடித்த 'புட்டம்மா' கதாபாத்திரமாகவே என்னைப் பார்க்கிறார்கள். நான் நடித்ததிலேயே அந்தப் படம்தான் மிக அதிகமாக மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழிலும் 'வைகுந்தபுரம்' என்ற தலைப்பில் வெளியானது.
"அந்தப் படத்தின் மூலம் இவ்வாறு சின்னச்சின்ன மகிழ்ச்சியான விஷயங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. மீண்டும் தமிழ் ரசிகர்களுடன் இணையும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த முறை அவர்கள் மனதில் நிரந்தரமாக ஓர் இடத்தைப் பிடிப்பேன். அதுதான் இப்போது என் இலக்கு," என்கிறார் பூஜா ஹெக்டே.

