'துருவ நட்சத்திரம்' திரைப்படத்தின் வெளியீடு தாமதமாவதால் வருத்தத்தில் உள்ளாராம் விக்ரம்.
அப்படத்தின் இயக்குநரான கவுதம் மேனனிடம் பட வேலைகளை விரைவில் முடிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது.
இப்படம் நீண்ட நாள்களாக தயாரிப்பில் உள்ளது. படத்தின் முதல் தோற்றச் சுவரொட்டிக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து சூட்டோடு சூடாக வெளியீடு காணும் என எதிர்பார்க்கப்பட்டது.
எனினும் அவ்வாறு நடக்கவில்லை. பணப்பிரச்சினையால் தாமதமாவதாக காரணம் கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில் இப்படத்தின் சில காட்சிகள் இன்னும் படமாக்கப்படவில்லை என தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இந்தக் காட்சிகளை உடனடியாக படமாக்குமாறு இயக்குநர் கவுதம் மேனனிடம் விக்ரம் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டதாம்.
தன் மகன் துருவ் நடிக்கும் படத்தில் தானும் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றிருப்பதால் அதில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது என்றும் விக்ரம் கூறியுள்ளாராம்.இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார்.
'துருவ நட்சத்திரம்' படப்பிடிப்புக்கு இயக்குநர் கவுதம் மேனனால் ஏற்பாடு செய்ய முடியவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அப்படத்தின் வெளியீடு மேலும் தாமதமாகிறது.