இந்துஜா: மறக்க முடியாத தருணம்
திரையில் தம்மை முதன்முதலாகப் பார்த்தது தான் வாழ்நாளில் மறக்க இயலாத இனிய தருணம் என்று கூறியுள்ளார் இந்துஜா.
வைபவ், பிரியா பவானி சங்கருடன் நடித்த 'மேயாத மான்' தான் இவர் அறிமுகமான படம்.
அண்மையில் இணையம் வழி ரசிகர்களுடன் பங்கேற்ற கலந்துரையாடல் நிகழ்வின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தற்போது விஜய் ஆண்டனியுடன் 'காக்கி' படத்தில் நடித்து வருபவர், 'பிகில்' பட அனுபவங்களை வாழ்நாளில் மறக்கவே இயலாது என்கிறார்.
"அந்தப் படத்தில் 'வேம்பு' கதாபாத்திரத்தில் நடித்தேன். ரசிகர்கள் இன்னும் அதை நினைவில் வைத்துள்ளனர்.
"விஜய் சாருடன் நடித்த நாட்கள் இனிமையானவை. அவர் இளையர்களுக்கு மிகப்பெரிய ஊக்க சக்தி. மேலும் பிறரது திறமையைப் பாராட்டுபவர். அசாத்திய திறமைகளும் மிகுந்த மனிதநேயமும் கொண்டவர் என்பதை நேரில் கண்டு உணர்ந்துள்ளேன்," என்று கூறியுள்ளார் இந்துஜா.
'எஞ்ஜாமி' பாடலுக்கு ராஷி நடனம்
'என்ஜாய் எஞ்ஜாமி' பாடல் இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. இதையடுத்து திரைக் கலைஞர்கள் பலர் இந்தப் பாடலுக்கு நடனமாடி அதைக் காணொளியாகப் பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர்.
நடிகை நஸ்ரியா அண்மையில் தனது சகோதரருடன் நடனமாடும் காணொளிப்பதிவை டுவிட்டரில் வெளியிட்டார்.
தற்போது அந்தப் பட்டியலில் நடிகை ராஷி கன்னாவும் இணைந்துள்ளார்.
"இந்தப் பாடல் எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது. அதனால்தான் நடனமாடி என் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளேன். இப்பாடலுக்காக என்னுடன் இணைந்து நடனமாடிய என் கூட்டாளிக்கு நன்றி," என்று தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார் ராஷி கன்னா.
'என்ஜாய் எஞ்ஜாமி' பாடலுக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.