'மாஸ்டர்' படத்துக்குப் பிறகு வெளியீடு கண்ட தமிழ்ப் படங்கள் வசூலில் பெரிதாக சாதித்ததாக தகவல் ஏதுமில்லை. இதனால் பல தயாரிப்பாளர்கள் பணப்பிரச்சினையில் சிக்கியுள்ளதாகத் தகவல்.
இந்நிலையில் தெலுங்கில் வெளியாகும் படங்களின் வசூல் நன்றாக இருப்பதாகவும் அங்கு மேலும் பல படங்கள் அடுத்தடுத்து வெளியீடு காண இருப்பதாகவும் தகவல். கோடம்பாக்கத்திலோ அதற்கு நேர்மாறாக புதுப்படங்களை வெளியிட தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் தயங்கி வருவதாகக் கூறப்படுகிறது.
'மாஸ்டர்' படம் வெளியான பிறகு ரசிகர்கள் மத்தியில் திரையரங்குகளுக்குச் செல்வதில் இருந்த தயக்கம் மறைந்து போனது. ஏராளமானோர் திரையரங்குகளுக்கு படையெடுத்ததால் அப்படம் வசூலில் சாதனை புரிந்தது.
இந்தித் திரையுலகத்தினரும்கூட 'மாஸ்ட'ரையும் அதன் நாயகன் விஜய்யையும் பாராட்டித் தீர்த்தனர். இதனால் கோடம்பாக்கத்தில் உற்சாக அலை காணப்பட்டது. ஆனால், இப்போதோ நிலைமை தலைகீழ்.
பொது ஊரடங்குக்குப் பிறகு தமிழில் இதுவரை 45க்கும் மேற்பட்ட படங்கள் வெளியீடு கண்டுள்ளன. ஆனால், எந்தப் படமும் வசூல் ரீதியில் வெற்றி பெற்றதாகத் தகவல் இல்லை. எந்தப் படத்துக்கும் திரையரங்கில் கூட்டம் தென்படவில்லை என்றும் இது கவலைக்குரிய நிலைமை என்றும் கோடம்பாக்கத்து விவரப்புள்ளிகள் தெரிவிக்கின்றனர்.
ஆனால், தெலுங்கு தேசத்தில் ஆரோக்கியமான நிலைமை காணப்படுகிறது. அங்கு வாரந்தோறும் குறைந்தபட்சம் மூன்று படங்கள் வெளியீடு காண்பதாகவும் அவை மூன்றுமே குறைந்தபட்ச லாபத்தை ஈட்டுவதாகவும் கூறப்படுகிறது.
அண்மைக் காலத்தில் ஆறு தெலுங்குப் படங்கள் வசூல் ரீதியில் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளன. குறைந்த பொருட்செலவில் விஜய் சேதுபதி நடித்து வெளியான 'உப்பெண்ணா' தெலுங்குப் படம் 100 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
"வீட்டில் இருந்தபடியே அனைத்து மொழிப் படங்களையும் பார்க்க முடியும் என்ற சூழல் உருவாகி விட்டது. எனவே, ரசிகர்களைத் திரையரங்குக்கு வரவைப்பது அவ்வளவு எளிதல்ல. திரையரங்கு சென்று படம் பார்ப்பதென்றால், ஏற்படக்கூடிய செலவு அவர்களைத் திகைக்க வைக்கிறது.
"நுழைவுச்சீட்டு, தின்பண்டங்களுக்கான செலவு, வாகன நிறுத்துமிட கட்டணம் என ஒரு தனி நபருக்கு மட்டும் குறைந்தபட்சம் 500 ரூபாய் செலவாகும் என்றால், குடும்பமாக செல்லும்போது ஆகக்கூடிய செலவு நிச்சயம் அதிகம்தான். அதேசமயம் ஓடிடி எனப்படும் இணையதளத்தில் நூற்றுக்கணக்கான படங்கள் கொட்டிக் கிடக்கின்றன.
"மேலும், ஒரு முறை பணம் கட்டினால் போதும். ஏராளமான படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், இணையத் தொடர்கள், விளையாட்டுப் போட்டிகளைப் பார்க்க முடிகிறது. வேலையை முடித்துவிட்டு நிம்மதியாக, நமக்கு வசதிப்பட்ட நேரத்தில் படம் பார்க்கலாம்.
"ஆந்திராவில் சினிமா காதலர்கள் இன்றளவும் பழைய ரசனையுடன் இருக்கிறார்கள். அங்கு திரையரங்க கட்டணங்களும் குறைவாக இருப்பது நல்ல விஷயம். குறைந்தபட்ச, அதிகபட்ச கட்டணங்கள் இருப்பதால் அனைத்துத் தரப்பினரும் திரையரங்குக்குச் செல்ல முடிகிறது. ஆனால் தமிழகத்தில் 120 ரூபாய்க்குக் குறைந்து நுழைவுச்சீட்டு விற்கப்படுவதில்லை," என்கிறார் பிரபல ஒளிப்பதிவாளர் பன்னீர்செல்வம்.
விஜய் படத்தை வெளியிட்டபோது திரையரங்க நுழைவுச்சீட்டுக் கட்டணம் தொடங்கி, தின்பண்டங்கள் வரை அனைத்து விலைகளையும் சகட்டுமேனிக்கு உயர்த்தி விட்டனர். அதனால், அந்தப் பக்கம் போகவே கூடாது என பல ரசிர்கள் முடிவு செய்துவிட்டனர்.
"நாங்கள் கட்டணத்தைக் குறைக்கமாட்டோம் என்றும் தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் நாங்கள் சொல்வதைத்தான் கேட்கவேண்டும் என்றும் திரையரங்குகள் தரப்பில் கட்டளையிடுவதும் அபத்தமாகவே இருக்கிறது," என்கிறார் எழுத்தாளரும் இயக்குநருமான கேபிள் சங்கர்.
மேலும் திரையரங்குக்கு வரும் ரசிகர்களை உற்சாகப்படுத்த சில சலுகைகளை அளிக்கவேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்.
"நான்கு நுழைவுச்சீட்டுகள் வாங்கினால் பாப்கார்ன் அல்லது குளிர்பானங்கள் இலவசம். ஒரு நுழைவுச்சீட்டுக்கு ஒரு தின்பண்டம் என்று ரசிகர்களின் பாக்கெட் பழுக்காதபடி பார்த்துக் கொண்டால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்," என்கிறார் சங்கர்.
கொரோனா தொற்றுப் பரவல் மீண்டும் அதிகரித்துவரும் நிலையில் திரையுலகம் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்ப குறைந்தபட்சம் ஓராண்டாகும் என்கிறார் 40 ஆண்டு கால அனுபவம் உள்ள தயாரிப்பாளரான கேயார்.
அதேசமயம் பணப்புழக்கம் இல்லாததும் மக்களுக்கு கிருமித் தொற்று பயம் போகாததும் கவனிக்கப்பட வேண்டிய அம்சங்கள் என சுட்டிக்காட்டுகிறார் தயாரிப்பாளர் சிவா.
"ஏராளமானோர் வாழ்வாதாரப் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர். வேலை போனது, சம்பளம் குறைந்தது, நிலையான வருமானம் இல்லாதது எனப் பல காரணங்களால் மக்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதைக் கவனிக்க வேண்டும்," என்றும் அவர் சுட்டிக் காட்டுகிறார்.
திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் தலைவரான திருப்பூர் சுப்பிரமணியம் சொல்வதையும் கவனிக்க வேண்டி உள்ளது.
'மாஸ்டர்' போன்று நான்கைந்து படங்கள் அடுத்தடுத்து வெளியீடு கண்டிருந்தால் ரசிகர்கள் மனநிறைவு அடைந்திருப்பார்கள். இயல்பு நிலையும் திரும்பியிருக்கும் என்கிறார் அவர். ஆனால், அண்மைக் காலத்தில் வெளியான பல படங்கள் சுமார் ரகத்தைச் சேர்ந்தவை என்பதால் ரசிகர்கள் அவற்றைப் பார்க்க ஆர்வம் காட்டவில்லை என்றும் கூறுகிறார்.
"நடிகர், நடிகைகள் முதல் தொழில்நுட்பக் கலைஞர்கள் வரை யாருமே சம்பளக் குறைப்பு குறித்து பேச தயாராக இல்லை. மேலும் தரமான படைப்புகளைத் தரும் ஆர்வமும் பெரும்பாலானருக்கு இல்லை.
"நயன்தாரா தொடங்கி நேற்று அறிமுகமான நாயகிகள் வரை சம்பளத்தை உயர்த்திய வண்ணம் உள்ளனர். மேலும் வளர்ந்துவரும் நாயகிகளே சம்பளத்தை உயர்த்தும்போது முன்னணி நடிகர்கள் சும்மா இருப்பார்களா?
"மேலும் தயாரிப்புச் செலவைக் குறைப்பதற்கும் நடவடிக்கைகள் எடுப்பதோ திட்டமிடுவதோ இல்லை. இவையெல்லாம் மாறினால்தான் தயாரிப்பாளர்கள் முன்புபோல் லாபம் காணமுடியும். இல்லையெனில் சிக்கல்தான். ஆனால் இவையெல்லாம் தெலுங்குத் திரையுலகில் சாத்தியமாகிறது. அதனால் அங்கு சினிமா துறை நலமாகவும் வளமாகவும் உள்ளது," என்கிறார்கள் கோடம்பாக்கத்து விவரப்புள்ளிகள்.

