நல்ல கதைக்கருவுள்ள, சமூகத்துக்கு நல்ல விஷயங்களை எடுத்துச் சொல்லக்கூடிய படங்களில் நடிப்பதுதான் தனது நோக்கம் என்கிறார் ஷீலா ராஜ்குமார்.
'டூலெட்', 'திரௌபதி', 'மண்டேலா' என்று இவர் தேர்வு செய்யும் படங்கள் இவரைக் கவனிக்க வைக்கின்றன. அதே சமயம் சர்ச்சைக்குரிய படைப்புகளிலே நடிப்பது மட்டும் இலக்கல்ல என்றும் தெளிவுபடுத்துகிறார் ஷீலா.
"'திரௌபதி' படத்தின் கதைக்கரு எனக்குப் பிடித்திருந்தது. எத்தகைய கதாபாத்திரத்தில் நடித்தால் நான் முன்னேற முடியும் என்பதைக் கணக்கிட்டுச் செயல்படுகிறேன்.
"எனக்குப் பிடித்த பாத்திரங்களில் மட்டுமே நடிப்பேன்.
"அதேசமயம் கருத்து ரீதியாக 'திரௌபதி' குறித்து ஏதும் விவாதிக்க விரும்பவில்லை. படத்தை எப்படி உருவாக்குவது என்பது இயக்குநரின் விருப்பம். அதில் நான் தலையிட முடியாது," என்று பக்குவமாகப் பேசுகிறார் ஷீலா.
யோகிபாபுவும் இவரும் இணைந்து நடித்துள்ள மண்டேலா திரைப்படம் அண்மையில் வெளியாகி வசூல், விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
சிறு வயது முதலே இவருக்கு நடிப்பில் மிகுந்த ஆர்வமாம். பள்ளியில் எல்லாப் பாடங்களிலும் குறைவான மதிப்பெண் பெற்றுதான் தேர்ச்சி பெற்றுள்ளார். ஆசிரியர்கள் அப்போது கண்டிக்கும்பொழுது முகத்தைப் பலவிதமாக வைத்துக்கொண்டு அவர்களின் பரிதாபத்தைப் பெற்றுவிடுவாராம்.
"பள்ளிப் படிப்பு முடிந்தவுடன் பரதநாட்டியத்தில் பட்டமேற்படிப்பை முடித்தேன். அதன்பிறகு பல நாடகங்களில் பங்கேற்கும் வாய்ப்புகள் கிடைத்தன. கூத்துப்பட்டறை நாடகங்களிலும் என்னைச் சிலர் பார்த்திருக்க முடியும்.
"அதன் பிறகு சினிமாவில் நடித்தால் நிச்சயம் சாதிக்க முடியும் என்று தோன்றியது. 'டூலெட்' படம் அதற்கான நல்ல வாய்ப்பாக அமைந்தது. அந்தப் படத்தைத் தயாரித்த நிறுவனமே பிறகு ஒரு தொலைக்காட்சித் தொடரில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு கொடுத்தது.
"நான் நடித்த எல்லா கதாபாத்திரங்களுமே சமூக ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவையாக அமைந்ததும் நல்ல, வலுவான கதைகள் அமைவதும் எனது அதிர்ஷ்டம்," என்கிறார் ஷீலா ராஜ்குமார்.
ஒரே மாதிரியான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்யாமல் வித்தியாசம் காட்டவேண்டும் என்பதுதான் தமக்குப் பிடிக்கும் என்று சொல்பவர், 'மண்டேலா' படத்தில் யோகிபாபுவுடன் நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது என்கிறார்.
யோகிபாபுவைப் போல தானும் கலகலப்பான பெண்தான் என்று சொல்பவர், அவருக்கு இணையாக தானும் நகைச்சுவையில் மிளிர முயற்சி செய்ததாகக் கூறுகிறார்.
"யோகிபாபு ஏதாவது நகைச்சுவையாக சொல்லிக்கொண்டிருப்பாரே, அவரை எப்படி சமாளித்தீர்கள் என்று பலர் என்னிடம் கேட்டனர். உண்மையில் நானும் நிறைய சேட்டைகள் செய்வேன். ஆனால் பார்ப்பதற்கு அமைதியாக இருப்பேன்.
'மண்டேலா' படம் குறித்து?
"அப்படிப்பட்ட கதாபாத்திரத்தை பெரும்பாலான கிராமத்துப் பெண்கள் நிச்சயம் விரும்புவார்கள். பொதுவாக அழகு, புறத்தோற்றம் ஆகியவற்றைக் கடந்து ஒரு தனிப்பட்ட மனிதன் என்ன செய்கிறான், மற்றவர்களுக்கு எப்படி முன்மாதிரியாக செயல்படுகிறான் என்பதுதான் நிஜ வாழ்க்கையின் முக்கியமான அம்சங்கள். அப்படியானதொரு கதாபாத்திரம்தான் 'மண்டேலா'. அதனால்தான் பட நாயகி தேன்மொழி மண்டேலாவை நேசிப்பாள். இப்படிப்பட்ட கதாபாத்திரங்களை யாருக்குத்தான் பிடிக்காது. ரசிகர்களுக்குப் பிடித்ததால் வரவேற்கிறார்கள்," என்கிறார் ஷீலா.

