திரைப்படத் தயாரிப்பு என்பது வெறும் கதையுடன் மட்டுமே சம்பந்தப்பட்டதல்ல என்றும் திரைத்துறையுடன் தொடர்புடைய பல்வேறு அம்சங்கள் அதில் உள்ளன என்றும் சொல்கிறார் ஏ.ஆர். ரகுமான்.
இசை, காட்சிகள், ஒலிப்பதிவு ஆகிய அனைத்தும் சேர்ந்த ஒரு மாய வித்தைதான் சினிமா என்றும் அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரகுமான் தயாரித்துள்ள முதல் படம் '99 சாங்ஸ்'. வரும் 16ஆம் தேதி வெளியீடு காண உள்ள இந்தப் படத்திற்கான கதையையும் அவர்தான் எழுதியுள்ளார்.
தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் இப்படம் வெளியீடு காண்கிறது. முதன்முறையாக கதை எழுதும்போது சில சவால்களை எதிர்கொண்டாராம் ரகுமான்.
"முதன்முறையாக கதை எழுதும்போது நமக்குத் தெரிந்த அனைத்து விஷயங்களையும் அதில் குறிப்பிட வேண்டும் என முயற்சி செய்வோம்.
"300 விழுக்காடு அளவுள்ள கதையை எழுதி அதை 100 விழுக்காடாக வடிகட்டி ரசிகர்களுக்கு எப்படி கொடுக்க முடியும் என்பதை இந்தப் படத்தில் கற்றுக்கொண்டேன்.
"எனக்கு நிறைய இயக்குநர்கள் நண்பர்களாக உள்ளனர். அவர்கள் மிகச்சிறந்த படைப்புகளைக் கொடுத்தவர்கள். ஆனால் என்னுடையது ஒரு சின்ன முயற்சி. அதாவது புதிய குரல்.
"அது தற்போது இணையம் வழி திரைப்படங்களைப் பார்க்கும் தலைமுறையினருக்கானது. உலகம் முழுவதும் உள்ள புதிய தலைமுறையினர் ஏற்கும் வகையில் எடுக்கப்பட்ட படம்தான் '99 சாங்ஸ்'," என்கிறார் ரகுமான்.
அனுபவம் வாய்ந்த இயக்குநரைக் கொண்டு இப்படத்தை உருவாக்கி இருக்கலாம் என்றாலும் அதை விரும்பவில்லையாம். காரணம் சுதந்திரமாகச் செயல்படுவதே தமது விருப்பம் என்கிறார்.
"ஓர் இசையமைப்பாளராக இருந்துகொண்டு திடீரென வேறொரு வேலையில் ஈடுபட்டால் அத்துறையைச் சார்ந்த பிரபலங்கள் நம்மை ஒருமாதிரியாகப் பார்ப்பார்கள். எனவே அவர்களை அணுக முடியாது. அதனால் புதியவர்களை வைத்து எனது சொந்தப் படத்தை தயாரிக்க முடிவு செய்தேன்.
"இத்திரைப்படத்தின் இயக்குநர் விஸ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி, திறமைமிக்க நடிகர்களான ஏஹன் பட், எடில்ஸி வர்காஸ் ஆகியோரை அறிமுகப்படுத்துவதற்கு மகிழ்ச்சி அடைகிறேன்.
"மனிஷா கொய்ராலா, லிசா ரே போன்ற புகழ்பெற்ற நட்சத்திரங்கள், ரஞ்சித் பாரோட், ராகுல் ராம் போன்ற இசை மேதைகளுடன் இணைந்து பணிபுரிந்தது சிறந்த அனுபவமாக இருந்தது," என்கிறார் ரகுமான்.
பழைய, புதிய உலகங்களுடனான ஒரு மனிதனின் போராட்டமே '99 சாங்ஸ்' படத்தின் மையக்கருவாகும். அதற்கான மாற்று மருந்தாக இசை அமைகிறது என்று விவரிக்கும் படமாம் இது.
இந்தப் படம் ரசிகர்களுக்கு இசை விருந்தாக அமையும் என்று படக்குழுவினர் நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றனர்.

