திரைத் துளிகள்

திரைத் துளிகள்

2 mins read
8edfcf2b-1e17-4a0d-a9ea-384947341919
-
multi-img1 of 2

செந்திலுக்கு கொரோனா தொற்று

நடிகர் செந்தில் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இத்தகவலை அவரது குடும்பத்தார் உறுதி செய்துள்ளனர்.

68 வயதான செந்தில் நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின்போது தாம் சார்ந்துள்ள கட்சிக்காக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

இதையடுத்து அவர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்கத் திட்டமிட்டிருந்தார்.

இந்நிலையில் அவருக்கு கிருமித்தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது. இதனால் மனைவி கலைச்செல்வியுடன் அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் அடுத்த ஓரிரு தினங்களில் மனைவியுடன் வீடு திரும்புவார் என்றும் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

கபடி வீரராக களமிறங்கும் துருவ்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் விக்ரம் மகன் துருவ் நாயகனாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உண்மைக்கதையை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தில் கபடி வீரராக நடிக்கிறார் துருவ்.

சாதாரண குடும்பத்தில் பிறந்த ஒரு கபடி வீரர் எப்படி பல்வேறு தடைகளைக் கடந்து அனைத்துலக அரங்கில் இந்தியாவுக்காக பல்வேறு போட்டிகளில் பங்கேற்றுச் சாதிக்கிறார் என்பதுதான் கதையாம்.

தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 'சீயான் 60' படத்தில் தனது தந்தை விக்ரமுடன் நடித்து வருகிறார் துருவ். இந்தப் படத்துக்கான படப்பிடிப்பு முடிவடைந்த கையோடு கபடி வீரராக களமிறங்க உள்ளாராம்.

இந்நிலையில் நேரம் கிடைக்கும்போதெல்லாம் கபடி பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறார் துருவ். இந்தப் படம் தமக்கு தமிழில் முதல் வெற்றிப்படமாக அமையும் என உறுதியாக நம்புவதாக துருவ் கூறி வருகிறார்.