கல்லூரி விடுதிக்குள் நுழைந்து ரகளை செய்யும் பிரியா

கல்லூரி விடுதிக்குள் நுழைந்து ரகளை செய்யும் பிரியா

2 mins read
b2ee975b-04fe-447a-9f78-57038e2af2e1
படப்பிடிப்புத் தளத்தில் அசோக் செல்வன், பிரியா பவானி சங்கர். -

சுமந்த் ராதாகிருஷ்­ணன் இயக்­கத்­தில் உரு­வாகி இருக்­கிறது 'ஹாஸ்டல்'.

அசோக் செல்­வன், பிரியா பவானி சங்­கர் இணைந்து நடிக்கும் இப்­ப­டம் இளை­யர்­களை நிச்சயம் கவ­ரும் எனப் படக்­கு­ழு­வி­னர் இப்­போதே உத்­த­ர­வா­தம் அளிக்­கின்­ற­னர்.

இது முழு நீள நகைச்­சுவைப் படம் என்­றும் ஒவ்­வொரு காட்சி­யும் ரசிக்க வைக்­கும் என்­றும் சொல்­கி­றார் இயக்­கு­நர். அது மட்டு­மல்ல, இதில் காதல், டூயட் பாடல்­கள் ஆகி­ய­வற்­றுக்கு அறவே இடம் இல்­லை­யாம்.

சரி... அப்­ப­டி­யென்ன சுவா­ர­சி­ய­மான கதை?

அசோக் செல்­வ­னு­டன் ஏற்­படும் சின்ன தக­ராறு காரணமாக அவர் பயி­லும் கல்­லூரி மாண­வர் விடு­திக்­குள் நுழைந்து அவரை மிரட்­டு­கி­றார் பிரியா பவானி சங்­கர். இதை அவர் விளை­யாட்­டா­கச் செய்­யப்­போய் எதிர்­பா­ரா­­வி­த­மாக அங்கே மாட்டிக்­கொள்­கி­றார்.

ஆண்­கள் விடு­திக்­குள் ஒரு பெண் இருப்­ப­தைப் பார்த்­தால் அதன் கண்­கா­ணிப்­பா­ள­ரான நாசர், சம்­பந்­தப்­பட்ட மாண­வனை கல்லூ ரியை ­விட்டே அனுப்­பி­வி­டு­வார். அவ­ரது கண்­ணி­லும் அவ­ரு­டைய உத­வி­யா­ள­ராக வரும் முனீஸ்­காந்த் பார்­வை­யி­லும் படாமல், பிரியா பவானி சங்­கரை வெளியே அனுப்ப அசோக் செல்­வன் என்ன பாடு படு­கி­றார் என்­ப­து­தான் கதை.

எனவே இந்­தக் கதை­யில் காதல் என்­கி­ற பேச்­சுக்கே இட­மில்லை என்­றும் ஒரே இடத்­தில் நடக்­கும் கதை என்­ப­தால் வெளிப்­புற படப்­பி­டிப்பு, அதிக செலவு என்­றெல்­லாம் மெனக்­கெ­ட­வில்லை என்­றும் படக்­குழு தெரி­விக்­கிறது.

"இது மூன்று நாள்­கள் நடக்­கும் கதை. இதில் கட்­டுப்­பா­டு­கள் மிக்க கல்லூரி விடு­தி­யில் தங்­கிப் படிக்­கும் மாண­வர்­கள் வாழ்க்கை எப்­படி இ­ருக்­கும் என்­ப­தைப் பார்க்­க­லாம். விடுதி வாழ்க்­கை­யைக் கடந்து வந்­த­வர்­க­ளுக்கு ரகளையான நினைவூட்­ட­லா­கப் படம் இருக்­கும்.

"அப்­ப­டிப்­பட்ட வாழ்க்­கையை அனு­ப­விக்காத­வர்­களை ஏங்க வைக்­கும். அவ்­வ­ளவு கதா­பாத்­தி­ரங்­களை கதைக்­குள் கொண்­டு­வந்­தி­ருக்­கி­றோம். நாச­ருக்­குக் கீழே வேலை செய்­யும் முனீஸ்­காந்­துக்­கும் மாண­வர்­க­ளுக்­கும் ஆகவே ஆகாது.

"எப்­போது வாய்ப்­பு கிடைக்­கும், வார்­ட­னி­டம் மாண­வர்­களை மாட்டி­வி­ட­லாம் என்று காத்­துக்­கொண்­டி­ருப்­பார் முனீஸ். விடுதிக்­கட்­ட­டத்­தின் ஒரு பகுதி இடிந்­து­வி­டும். இத­னால் மாண­வர்­க­ளைத் தற்­காலி­க­மாக வேறொரு பழைய கட்­ட­டத்­துக்கு மாற்றும் ­போ­து­தான் இந்தக் கதை நடக்­கிறது.

"அந்­தக் கட்­ட­டத்­தில் அறந்­தாங்கி நிஷா ஓர் எதிர்­பா­ராத கதா­பாத்­தி­ர­மாக வரு­கி­றார். இன்­னொரு பக்­கம் மக­ளைக் காண­வில்­லையே என்று பிரியா பவானி சங்­க­ரின் தந்தை தேடிக்­கொண்­டி­ருப்­பார். இப்­ப­டிச் செல்­கிறது திரைக்­கதை," என்கிறார் இயக்குநர் சுமந்த் ராதாகிருஷ்ணன்.

இப்­ப­டத்­தின் கதை­யைக் கேட்டு­விட்டு, சுமார் 15 ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு தமக்கு முழு­மை­யான நகைச்­சுவை வேடம் கிடைத்­தி­ருப்­ப­தாக நாசர் கூறி­னா­ராம்.

போபோ சசி இசை­ய­மைத்­துள்ள இப்­ப­டத்­தில் ரவி மரியா, சதீஷ், பாவா லட்­சு­ம­ணன், கலை­ராணி, யோகி, கிரிஷ் என பலர் துணைக் கதா­பாத்­தி­ரங்­களில் வரு­கி­றார்­கள். கோடை கால வெளி­யீ­டாக வருகிறது 'ஹாஸ்­டல்'.