பாட்டுப் பாடி அசத்திய நிவேதா
நடிகை நிவேதா தாமஸ் அண்மையில் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட காணொளிக்குப் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.
சூர்யா நடிப்பில் வெளியான 'ஜில்லுனு ஒரு காதல்' படத்தில் இடம்பெற்ற 'நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்' பாடலை தாமே பாடி இசையமைத்து அதைக் காணொளியாக வெளியிட்டுள்ளார் அவர்.
அண்மையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து வீட்டிலேயே தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். பயனுள்ள வகையில் பொழுதைப் போக்க முடிவு செய்தவர் தனக்குப் பிடித்தமான பாடல்களைப் பாடி காணொளிகளாக வெளியிட்டு வருகிறார்.
முதல் பாடலுக்குக் கிடைத்த வரவேற்பும் பாராட்டுகளும் உற்சாகப்படுத்தியதாகவும் கிருமித்தொற்றில் இருந்து விடுபட தமக்காக ரசிகர்கள் பிரார்த்தனை செய்வது நெகிழ வைப்பதாக வும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார் நிவேதா.
சுற்றுச்சூழல் காக்க காஜல் அறிவுரை
கடல் வாழ் உயிரினங்களைச் சாப்பிடுவதை நிறுத்துவதன் மூலம் கடல் வளத்தையும் கடலையும் காப்பாற்ற முடியும் என்கிறார் காஜல் அகர்வால்.
உலகம் முழுவதும் 'தேவையான அளவு மட்டுமே மீன் பிடித்தல்' என்ற வரையறையை யாருமே பின்பற்றுவதில்லை என்பதுதான் உண்மை என்றும் இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ளார்.
ஆழ்கடலில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்க எந்த அரசாங்கமும் முன்வருவதில்லை என்றும் இதுதொடர்பாக அனைத்துலகச் சட்டங்கள் ஏதும் இல்லையென்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
"அனைத்துவிதமான தொழிற்சாலைக் கழிவுகளும் சென்று கலக்கும் கடலில் சுத்தமான மீன்கள் என்று எதுவும் இல்லை. அதேசமயம் பல ஆண்டுகளாகத் தாவரங்கள் சார்ந்த உணவு வகைகளை மட்டுமே உண்பதால் எனக்கு ஊட்டச்சத்து தொடர்பான கவலைகளோ குறைபாடுகளோ இல்லை. எனவே சுற்றுச்சூழல் தொடர்பான ஒரு நிலைப்பாட்டை நாம் எடுத்தாக வேண்டும். கடல் அழிந்தால் நாமும் அழிவோம்," என்று சமூக அக்கறையுடன் எச்சரித்துள்ளார் காஜல்.