'க/பெ. ரணசிங்கம்' படத்துக்குப் பிறகு கதைகளைத் தேர்வு செய்வதில் மிகுந்த கவனம் செலுத்துகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
அவர் நடிக்கும் புதிய படமான 'டிரைவர் ஜமுனா' ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.
இதில் முதன்முறையாக வாடகைக்கார் ஓட்டுநராக நடிக்கிறார் ஐஸ்வர்யா. கின்ஸ்லி இயக்கும் இந்தப் படத்தின் பூசை அண்மையில் நடைபெற்றது. சூட்டோடு சூடாக படப்பிடிப்பையும் துவங்கி உள்ளனர்.
'தி கிரேட் இண்டியன் கிச்சன்' படத்தின் தமிழ் மறுபதிப்பு, 'டிரைவர் ஜமுனா' உள்ளிட்ட நாயகியை மையப்படுத்தி உருவாகும் படங்களில் நடிப்பது கூடுதல் உற்சாகம் அளிப்பதாகவும் அதேவேளையில் தமது பொறுப்புகள் அதிகரித்திருப்பதாகவும் சொல்கிறார் ஐஸ்வர்யா.
'டிரைவர் ஜமுனா' படத்தின் பெரும்பாலான காட்சிகளை சென்னையைச் சுற்றியே படமாக்க உள்ளனர்.
தாம் ஏற்றுள்ள கதாபாத்திரத்துக்காக பலரை நேரில் சந்தித்து அவர்களுடைய அனுபவங்களைக் கேட்டறிந்துள்ளார் ஐஸ்வர்யா.
பெண் ஓட்டுநர்களின் அனுபவங்களை அறிந்தபோது ஆச்சரியமும் கவலையும் அடைந்தாராம். தமது திரைப்பயணத்தில் இந்தப் படம் புதிய மைல்கல்லாக அமையும் என உறுதியாக நம்புவதாகச் சொல்கிறார்.
"இந்தப் படத்தின் கதை பல்வேறு சுவாரசியங்களையும் திருப்பங்களையும் கொண்டதாக இருக்கும். இயக்குநர் என்னிடம் கதையை விவரித்தபோது அதில் மூழ்கிப் போனேன் என்று சொல்வதே சரியாக இருக்கும்.
"தமிழ் சினிமாவில் வாடகைக்கார் ஓட்டுநர்கள் பற்றி வெளிவந்த படங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அவற்றுள் பெண் ஓட்டுநர்கள் பற்றி வெளிவந்த படங்கள் எதுவும் உடனடியாக நினைவுக்கு வரவில்லை. அந்த வகையில் இது முற்றிலும் புது முயற்சி என்பேன்.
"தமிழ் சினிமாவில் இத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது உற்சாகமளிக்கிறது. அதேசமயம் வாடகைக்கார் ஓட்டுநர்கள் பற்றிய படமாக மட்டும் அல்லாமல் குற்றச் செயல்களை விவரிக்கும் திகில் கதையாகவும் இது இருக்கும்.
"பெண் ஓட்டுநர்கள் தங்கள் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் சவால்களையும் எடுத்துச் சொல்லும் படைப்பு இது. இயக்குநர் ஒவ்வொரு காட்சியையும் மிக நேர்த்தியாகச் செதுக்கி உள்ளார்.
"அவரது அறிவுரையின்படிதான் பல பெண் ஓட்டுநர்களை நேரில் சந்தித்துப் பேசினேன். அப்போதுதான் அவர்கள் எத்தகையதொரு வாழ்க்கையை எதிர்கொண்டுள்ளனர் என்பது எனக்குத் தெரியவந்தது," என்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
தமிழ், இந்தி, தெலுங்கு என 'டிரைவர் ஜமுனா' மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது.
ஐஸ்வர்யாவுக்கு இப்போது தெலுங்கிலும் தனி ரசிகர் வட்டம் உள்ளதாம். அதனால் தெலுங்கிலும் இந்தப் படம் வசூலில் சாதித்து வெற்றி பெறும் எனப் படக்குழு நம்புகிறது. இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
"இந்தப் படத்தில் சில துரத்தல் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. அவற்றில் 'டூப்' போடாமல் நடித்துள்ளேன். அதுபோன்ற அனுபவம் இதுவரை எனக்கு ஏற்பட்டதில்லை.
"இப்படிப்பட்ட சவாலான கதாபாத்திரங்கள் அமையும் என்றால் எத்தகைய ஆபத்தான காட்சிகளிலும் நடிப்பதற்கு நான் தயார்," என்கிறார் ஐஸ்வர்யா.
மலையாளத்தில் வெற்றி பெற்ற 'தி கிரேட் இண்டியன் கிச்சன்' மறுபதிப்பை ஆர். கண்ணன் இயக்குகிறார். இன்றைய நவீன சமூகத்தில் பெண்கள் பலவிதமாக பாதிக்கப்படுவதை விவரிக்கிறதாம் இப்படம்.
"ஆணாதிக்க மனோபாவத்தால் பல பெண்களுக்கு நியாயம் மறுக்கப்படுகிறது. இதனால் அந்தப் பெண்கள் எந்தளவுக்குப் பாதிக்கப்படுகிறார்கள், மன ரீதியிலான அழுத்தத்துக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்பதை இந்தப் படம் யதார்த்தமான வகையில் சுட்டிக்காட்டுகிறது.
"தரமான படைப்பாக உருவாகும் இந்தப் படத்துக்கும் தமிழ் ரசிகர்கள் வரவேற்பு கொடுப்பார்கள் என உறுதியாக நம்புகிறேன்," என்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
, :
ஐஸ்வர்யா ராஜேஷ்

