'அந்நியன்' படத்தை இந்தியில் மறுபதிப்பு செய்வதாக இயக்குநர் சங்கர் அறிவித்த கையோடு சர்ச்சை வெடித்துள்ளது.
அந்தப் படத்தின் உரிமம் தம்மிடம் இருப்பதாகவும் மறுபதிப்பு செய்வதற்கான அனுமதியை சங்கர் முறைப்படி தம்மிடம் பெறவில்லை என்றும் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் புகார் எழுப்பியுள்ளார். ஆனால் சங்கரோ 'அந்நியன்' கதை தன்னுடையது என்பதால் யாரிடமும் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை என்கிறார்.
சங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்து 2005ல் வெளியான படம் 'அந்நியன்'. இதில் ரெமோ, அம்பி, அந்நியன் ஆகிய மூன்று வித்தியாசமான தோற்றங்களில் நடித்து ரசிகர்களிடம் பாராட்டுகளைப் பெற்றார் விக்ரம்.
தற்போது இப்படத்தை இந்தியில் மறுபதிப்பு செய்ய உள்ளனர். இந்தியில் ரன்வீர் சிங் நாயகனாக நடிப்பதாக சங்கர் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் 'அந்நியன்' மறுபதிப்பு தகவல் தமக்கு அதிர்ச்சி அளித்திருப்பதாக தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் கூறியுள்ளார்.
"எழுத்தாளர் சுஜாதாவிடம் அந்தக் கதையை முழு தொகை கொடுத்து நான் வாங்கி வைத்திருக்கிறேன். என்னிடம்தான் முழு உரிமை இருக்கிறது.
"மறுபதிப்பு செய்ய வேண்டும் என்றால் என்னிடம் அனுமதி பெற வேண்டும். அனுமதி பெறாமல் செயல்படுவது சட்டப்படி குற்றம்.
"பாய்ஸ்' படம் தோல்வி அடைந்து சங்கருக்கு மதிப்பு குறைந்தபோது நான்தான் 'அந்நியன்' படத்தை இயக்கும் வாய்ப்பைத் தந்து அவரை பழைய நிலைக்கு கொண்டு வந்தேன்.
"ஆனால் இப்போது என்னைத் தவிர்த்துவிட்டுச் செயல்படுவது சங்கரின் கீழ்த்தரமான மனநிலையைக் காட்டுகிறது," என்று ஆஸ்கார் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் 'அந்நியன்' படத்தின் திரைக்கதையிலோ பாத்திரப் படைப்பிலோ எழுத்தாளர் சுஜாதா சம்பந்தப்படவில்லை என்றும் வசனகர்த்தா என்பதைத் தாண்டி அவர் வேறு எந்த வகையிலும் அப்படத்தில் ஈடுபடவில்லை என்கிறார் சங்கர்.
"திரைக்கதை என்னிடம் இருப்பதால் அதை நான் விரும்பும் வகையில் பயன்படுத்திக் கொள்ளும் முழு உரிமை எனக்கு உள்ளது. 'அந்நியனு'க்காக நீங்களோ, உங்கள் நிறுவனமோ எந்த விதமான உரிமைகளையும் கோர முடியாது. ஏனெனில் அந்த உரிமை உங்களுக்கு எழுத்துபூர்வமாக தரப்படவில்லை. எனவே கதைக்கான உரிமை உங்களிடம் உள்ளது என்பதைச் சொல்ல உங்களுக்கு எந்த அடிப்படையும் இல்லை," என்று சங்கர் தெரிவித்துள்ளார்.

