கடந்த இரண்டு ஆண்டுகளாக பல விஷயங்கள் தமக்கு மனநிறைவை ஏற்படுத்தும் வகையில் நடந்து வருவதாகச் சொல்கிறார் மஞ்சு வாரியர்.
தமிழில் 'அசுரன்', மலையாளத்தில் 'த பிரீஸ்ட்', 'சதுர்முகம்' ஆகிய படங்களுக்கு கிடைத்த வரவேற்பும் பாராட்டுகளும் தமக்கு மிகுந்த உற்சாகம் அளித்திருப்பதாக அண்மைய பேட்டியில் அவர் கூறிஉள்ளார்.
"மூன்று படங்களுமே எனது நடிப்புத் திறமைக்குக் கிடைத்த அங்கீகாரங்களாக உள்ளன. கூடுதலாக விருதுகளும் கிடைத்திருப்பது மகிழ்ச்சியைப் பன்மடங்கு அதிகரித்திருப்பது உண்மைதான்.
"அதிலும் 'அசுரன்' படத்துக்கு தேசிய விருதும் பிற மொழிகளில் வரவேற்பு கிடைத்ததும் நான் எதிர்பாராத விஷயங்கள். அதேசமயம் விருதுகளை மீறி ரசிகர்களின் பாராட்டுதான் முக்கியம் எனக் கருதுகிறேன். ஏனெனில் ஒவ்வொரு கலைஞருக்கும் வளர்ச்சியும் மனநிறைவும் ரசிகர்களின் பாராட்டைப் பொறுத்தே அமைகிறது," என்கிறார் மஞ்சு வாரியர்.
'த பிரீஸ்ட்', 'சதுர்முகம்' ஆகிய இரு படங்களும் நல்ல வசூலைப் பெற்றுள்ளன. திகில் படங்களாக உருவாகி உள்ள இவற்றுக்கு விமர்சகர்கள் ஒருமித்த ஆதரவை வழங்கியுள்ளனர். 'சதுர்முகம்' கடந்த ஆண்டே வெளியாகி இருக்க வேண்டுமாம். ஆனால், கொரோனா விவகாரத்தால் எல்லாம் தாமதம் அடைந்துள்ளது.
"இரண்டுமே திகில் படங்கள்தான் என்றாலும் மாறுபட்ட கதைக்களங்களாக அமைந்தன. மேலும் இருவேறு கதாபாத்திரங்களில்தான் நடித்துள்ளேன். இரண்டு படைப்புகளுமே ரசிகர்களை திருப்திப் படுத்தும் என்ற நம்பிக்கை இருந்தாலும் வசூலிலும் பெரிதாகச் சாதிக்கும் என எதிர்பார்க்கவில்லை," என்கிறார் மஞ்சு வாரியர்.
'சதுர்முகம்' படத்தின் இறுதிக்காட்சியில் இவரது நடிப்புக்கு பலத்த பாராட்டு கிடைத்துள்ளது. மேலும் சக கலைஞர்களின் பங்களிப்புக்கும் ரசிகர்களின் அங்கீகாரம் கிடைத்திருப்பதுதான் படத்தின் வெற்றிக்குச் சான்று என்று சொல்லும் மஞ்சு வாரியர், இப்போது படத் தயாரிப்பிலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.
'சதுர்முகம்' படத்தில் எப்போதும் சமூக வலைத்தளங்களில் மூழ்கிக் கிடக்கும் பெண்ணாக நடித்துள்ளார். அதுகுறித்து ரசிகர்கள் தெரிவிக்கும் கருத்துகள் தம்மை வெகுவாகக் கவர்ந்திருப்பதாகச் சொல்கிறார்.
இதற்கிடையே அறிமுக இயக்குநர்கள் சிலரது படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளாராம் மஞ்சு. அவர்களிடம் பல்வேறு திறமைகள் குவிந்திருப்பதாகச் சொல்பவர், அத்தகையவர்களுக்கு வாய்ப்பு அளித்தால்தான் திரையுலகம் அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்ந்து செல்லும் என்கிறார். 'அசுரன்' பெரும் வெற்றியைப் பெற்ற பிறகும் தமிழ்ப் படங்களில் ஏன் கவனம் செலுத்துவதில்லை என்று பலரும் கேட்கிறார்களாம். அதற்கு தனிப்பட்ட காரணங்கள் ஏதும் இல்லை என்கிறார்.
"அனைவருக்கும் 'அசுரன்' படம் பெற்றுள்ள அபார வெற்றி குறித்து தெரியும். எனவே, நான் அடுத்து நடிக்கும் படம் 'அசுரனு'க்கு இணையாக அல்லது அதைவிட சிறப்பானதாக இருக்கவேண்டும் என விரும்புகிறேன். அப்படிப்பட்ட கதைக்காக பொறுமையுடன் காத்திருக்கிறேன்.
"அதுமட்டுமல்ல, அடுத்து ஒரு அடிதடி சண்டைக்காட்சிகள் நிறைந்த கதையில் நடிக்கவேண்டும் என்ற ஆர்வமும் உள்ளது," என்று சொல்லும் மஞ்சு வாரியர், அடுத்து மாதவனுடன் இணைந்து இந்திப் படம் ஒன்றிலும் நடிக்கிறார்.
, :
மஞ்சு வாரியர்