ஏமாற்றம் அடைந்த சாய் பல்லவி
எதிர்வரும் 30ஆம் தேதி திரைக்கு வருவதாக இருந்த 'விராடபருவம்' படத்தின் வெளியீடு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதில் ராணா டகுபதி நாயகனாகவும் சாய்பல்லவி நாயகியாகவும் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் தயாராகியுள்ளது.
இதில் முதன்முறையாக நக்சலைட் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சாய்பல்லவி. அதனால் ரசிகர்களைப் போலவே தாமும் இப்படத்தின் வெளியீட்டை ஆவலுடன் எதிர்நோக்குவதாக பல பேட்டிகளில் குறிப்பிட்டு வந்தார். கதைப்படி காவல்துறை அதிகாரியாக வரும் ராணா, சாய்பல்லவியைச் சுட்டுக் கொல்வது போன்று இறுதிக்காட்சி அமைக்கப்பட்டிருப்பதாகத் தகவல். இந்நிலையில் கொரோனா விவகாரத்தால் இப்படத்தின் வெளியீடு தள்ளிப் போயிருக்கிறது. இதனால் சாய்பல்லவி ஏமாற்றமடைந்துள்ளார்.
'அஜித் எனக்கு கூறிய அறிவுரைகள்'
மற்ற அனைத்தையும்விட குடும்பம்தான் முக்கியம் என்று நடிகர் அஜித் தமக்கு அறிவுரை கூறியதாகச் சொல்கிறார் யோகிபாபு.
மேலும், அவருடன் இணைந்து நடித்த போதெல் லாம் விரைவில் திருமணம் செய்துகொள்ளுமாறும் அஜித் அறிவுறுத்தியதாக சொல்கிறார்.
"அஜித் சார் எப்போதுமே மிக இயல்பாகவும் எளிமையாகவும் இருப்பார். அவருடன் படப்பிடிப்பில் இருக்கும்போது சில அறிவுரைகளைக் கூறியுள்ளார். விரைவாகத் திருமணம் செய்துகொள்ளுங்கள் என்பதே அவர் அடிக்கடி கூறிய அறிவுரை. திருமணத்துக்குப் பிறகு 'வலிமை' படத்தில் அவருடன் இணைந்து நடித்துள்ளேன். முதல் நாள் படப்பிடிப்பின்போது என்னைக் கட்டித் தழுவி வரவேற்றார். பின்னர் எத்தகைய சூழ்நிலையிலும் குடும்பம்தான் முக்கியம். அதை மறக்க வேண்டாம் என்று அறிவுரை கூறினார்," என்கிறார் யோகிபாபு.

