'மகா' படத்தின் வெளியீட்டுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார் ஹன்சிகா.
இந்நிலையில் தெலுங்கில் நல்ல வாய்ப்புகள் தேடி வருவதால் அங்கு கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்.
தெலுங்கில் கடைசியாக 'தெனாலி ராமகிருஷ்ணா' படத்தில் நடித்திருந்தார் ஹன்சிகா. இந்தப் படம் வசூல் ரீதியில் வெற்றி பெற்றதை அடுத்து சூட்டோடு சூடாக மேலும் சில படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவசரப்படவில்லை.
நல்ல கதைகள் அமைந்தால் மட்டுமே நடிப்பது என முடிவு செய்திருந்தார். இந்நிலையில் அந்த காத்திருப்பு வீண் போகவில்லையாம்.
தாம் எதிர்பார்த்த சவாலான கதைக்களமும் கதாபாத்திரமும் அமைந்திருப்பதாக அண்மையப் பேட்டியில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.
ஹன்சிகாவை உற்சாகப்படுத்தி உள்ள அந்தப் படம் '105 மினுட்டஸ்'. தெலுங்கில் உருவாகும் அப்படத்தை ராஜு துசா இயக்குகிறார்.
"இந்தப் படத்தில் ஒரு கதாபாத்திரம் மட்டுமே இடம்பெற்றிருக்கும். மேலும் ஒரே ஒரு காட்சியை மட்டுமே கொண்டு கதை விவரிக்கப்படும்.
"இதுவரை இப்படிப்பட்ட வித்தியாசமான கதையை நான் கேள்விப்பட்டதில்லை. கதைக்களத்தைப் போலவே எனக்கான கதாபாத்திரமும் வித்தியாசமாகவும் சவாலாகவும் உள்ளது.
"படத்தொகுப்பு என்பது தேவைப்படாது. இந்தப் படம் எனது ரசிகர்களை மட்டுமல்ல, அனைவரையுமே ரசிக்க வைக்கும். படப்பிடிப்பு எப்போது துவங்கும் என ஆவலுடன் காத்திருக்கிறேன்," என்கிறார் ஹன்சிகா.
'மகா' படம் தாம் எதிர்பார்த்தது போலவே நல்ல படைப்பாக உருவாகி உள்ளது என்று குறிப்பிடுபவர், மிக விரைவில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவும் வகையில் ஒரு நிதி திரட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
இவரைப் போலவே தமது அடுத்த படம் பெரும் மனநிறைவைத் தந்திருப்பதாகச் சொல்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
மலையாளத்தில் வெற்றி பெற்ற 'தி கிரேட் இண்டியன் கிச்சன்' படத்தின் தமிழ் மறுபதிப்பில் இவர் நடித்து வருகிறார்.
இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து மிக விரிவாக அலசப்பட்டிருக்கிறதாம்.
"பொதுவாக ஒரு படத்தை மறிபதிப்பு செய்வது மிகக் கடினம். அதிலும் வெற்றி பெற்ற படத்தின் அடிப்படை ஆன்மாவை அப்படியே கொண்டு வருவது முடியாத காரியம். அதனால்தான் மறுபதிப்பு படங்களில் நடிக்க மறுத்து வந்தேன்.
"ஆனால் இந்தப் புதிய படம் இன்றைய சமூகத்துக்கு மிகவும் தேவையான கருத்துகளை தாங்கி வருகிறது. அதனால்தான் நடிக்க சம்மதித்தேன்," என்கிறார் ஐஸ்வர்யா.
'க/பெ ரணசிங்கம்' படப்பிடிப்பின்போது, ஒரு சிறுமியை சந்திக்க நேர்ந்ததாம். அப்போது அந்தச் சிறுமிக்கு நேர்ந்துள்ள அவலம் குறித்து விவரம் அறிந்தபோது கலங்கிப் போனாராம்.
"அந்தச் சிறுமிக்கு ஒன்றுமே தெரியாத சிறு வயதில் திருமணம் செய்து வைக்கப்பட்டிருந்தது. அதை அந்தச் சிறுமியே விவரித்தபோது மனம் கலங்கிப் போனேன்.
"இதுபோன்ற சமூக அவலங்களைச் சொல்லும் வகையில் 'தி கிரேட் இண்டியன் கிச்சன்' மறுபதிப்பு உருவாகி வருகிறது.
"நம் வீடுகளில் பெண்களுடைய வாழ்வின் பெரும்பகுதியை சமையல் அறை ஆக்கிரமித்துக் கொள்கிறது. அவர்களின் அடிப்படை உணர்வுகளைக்கூட யாரும் பொருட்படுத்துவதில்லை.
"இந்த உண்மையைப் பேசக்கூடிய படத்தில் நடிப்பது அவசியம் என முடிவு செய்தேன். பல உண்மைகளை முகத்தில் அறைவது போல் இந்தப் படத்தில் சொல்லி இருக்கிறோம்," என்றார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

