சத்தமில்லாமல் பலருக்கு தம்மால் முடிந்த உதவிகளைச் செய்து வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.
மேலும் திறமைசாலிகளைத் தேடிக் கண்டறிந்து அவர்களை ஊக்குவிக்கவும் அவர் தவறுவதில்லை.
அண்மையில் சஹானா என்ற மாணவி மருத்துவப் படிப்புக்கான நுழைவுத்தேர்வை எழுத விரும்பியபோது, அதற்கான பயிற்சி வகுப்புக்குரிய கட்டணத்தைச் செலுத்தினார் சிவா.
இந்நிலையில் தேசிய அளவிலான தடகளப் போட்டியில் 100 மீட்டர் தொலைவை 11.39 விநாடிகளில் ஓடிக் கடந்த தனலட்சுமி என்ற இளம் வீராங்கனையை நேரில் அழைத்துப் பாராட்டி உள்ளார்.
திருச்சியைச் சேர்ந்த தனலட்சுமி தேசியப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். மேலும் பிரபல தடகள வீராங்கனை ஹீமாதாஸின் தேசிய சாதனையையும் அவர் எட்டியுள்ளார்.
இதை அறிந்த சிவகார்த்திகேயன் தனலட்சுமியைத் தமது அலுவலகத்திற்கு நேரில் வருமாறு அழைப்பு விடுத்து அந்த இளம் வீராங்கனையின் சாதனையைப் பாராட்டியதுடன் விலை உயர்ந்த 'ஸ்போர்ட்ஸ் ஷூ'வையும் பரிசளித்துள்ளார்.
மேலும் விளையாட்டுத் துறையில் சாதிக்க எத்தகைய உதவி தேவைப்பட்டாலும் தம்மிடம் கேட்கலாம் என்றும் தம்மால் முடிந்த உதவிகளைச் செய்யத் தயார் என்றும் தனலட்சுமியிடம் உறுதி அளித்துள்ளார் சிவா.
அவரது இந்தச் செயலுக்கு ரசிகர்கள் பலரும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர். தமது நண்பர்கள் திரையுலகில் சாதிக்கவும் உதவி செய்து வருகிறார் சிவகார்த்திகேயன். அருண்ராஜா காமராஜ், நடிகர்கள் ரியோ, சதீஷ் ஆகியோர் இவரால் பலன் பெற்றுள்ளனர்.
சிவா நடிப்பில் தற்போது 'அயலான்', 'டாக்டர்' ஆகிய இரு படங்கள் உருவாகி வருகின்றன. இரண்டுக்கும் விநியோகிப்பாளர் கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதாகத் தகவல். 'டாக்டர்' படம் நேரடியாக இணையத்தில் வெளியாக இருப்பதாக அண்மையில் ஒரு தகவல் வெளியானது.
ஆனால் படத்தயாரிப்புத் தரப்பு இதை மறுத்துள்ளது. இந்தப் படம் மே மாத மத்தியில் திரையரங்குகளில் மட்டுமே வெளியாகும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
மே 14ஆம் தேதி விஜய் ஆண்டனி நடித்துள்ள 'கோடியில் ஒருவன்' படமும் திரைகாண உள்ளது. இரு படங்களுக்குமே போதுமான திரையரங்குகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் வெளியீட்டுத் தேதியை தள்ளிப்போட வேண்டாம் என தயாரிப்புத் தரப்பிடம் சிவா கூறியுள்ளாராம்.

