மீண்டும் தன் மகனுக்காக களம் இறங்கி உள்ளார் நடிகர் தியாகராஜன்.
இந்திப் படத்தின் மறுபதிப்பாக இவரது இயக்கத்தில் உருவாகும் 'அந்தகன்' படத்தில் பிரசாந்த் நாயகனாக நடிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. வில்லி வேடத்தில் சிம்ரன் நடிப்பதும் இப்படத்தின் மீது ரசிகர்களின் கவனத்தைப் பதிய வைத்துள்ளது.
"இப்படத்தில் பார்வையற்ற பியானோ கலைஞராக நடிக்கிறேன். சிம்ரனும் நானும் இதற்கு முன்பு ஐந்து படங்களில் இணைந்து நடித்துள்ளோம். 'அந்தகன்' ஆறாவது படமாக உருவாகிறது.
"நாங்கள் இருவரும் இணைந்து நடித்த படங்கள் வெற்றி பெற்றதால் இந்தப் புதுப்படம் குறித்தும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது. கதாநாயகியாக பிரியா ஆனந்த் நடிக்கிறார். இதுவரை ஏற்றிராத ஒரு வேடத்தில் சமுத்திரகனி சாரைப் பார்க்க முடியும்.
"மேலும் கே.எஸ். ரவிக்குமார், ஊர்வசி, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அனைவரது கதாபாத்திரங்களுமே முக்கியத்துவம் வாய்ந்தவைதான். அதுதான் இந்தப் படத்தின் கதைக்குரிய சிறப்பம்சம்," என்கிறார் பிரசாந்த்.
தந்தை தியாகராஜனே படத்தை இயக்குவதால் தமக்கு சிறப்புச் சலுகைகள் ஏதும் கிடைத்து விடாது என்று குறிப்பிடுபவர், ஓர் இயக்குநராக தமது தந்தையைத் திருப்திப்படுத்துவது மிகவும் கடினம் என்கிறார்.
"படப்பிடிப்பின்போது அவரை 'சார்' என்றுதான் அழைப்பேன். இயக்குநர் என்ற வகையில் ஒரு நடிகரின் பலம், பலவீனங்களை அவர் எளிதில் கண்டுபிடித்து விடுவார். அதனால்தான் அவரைப் படப்பிடிப்புத் தளத்தில் இயக்குநராகவே பார்க்கப் பழகிவிட்டேன்.
"அதேசமயம் திறமையை கச்சிதமாக வெளிப்படுத்தும்போது மனதாரப் பாராட்டவும் செய்வார். அவரது அனுபவம் இந்தப் படத்தின் பெரிய பலம்," என்கிறார் பிரசாந்த்.
இந்தியில் வெளியான 'அந்தாதூன்' படத்தின் மறுபதிப்பாக 'அந்தகன்' உருவாகி வருகிறது. இந்தியில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்டோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். விமர்சன, வசூல் ரீதியில் பெரிய வெற்றியைப் பெற்றது 'அந்தாதூன்'. இதன் தமிழ் மறுபதிப்பு உரிமையைப் பெற்று தாமே இயக்கி வருகிறார் தியாகராஜன்.

