திரையுலகில் அறிமுகமான வேகத்திலேயே பிரியங்கா மோகனுக்கு வாய்ப்புகள் குவிகின்றன. தெலுங்கு தேசத்திலிருந்து கோடம்பாக்கத்தில் கால்பதித்துள்ள இவர், சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' படத்தில் நாயகியாக நடிக்கிறார்.
அதையடுத்து சிவாவுடன் மீண்டும் 'டான்' படத்தில் இணைந்திருப்பவர், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கும் 'சூர்யா 40' படத்தின் நாயகியாகவும் நடிக்கிறார்.
"அடிப்படையில் நான் மேடை நாடக நடிகை. நிறைய நாடகங்களில் நடித்திருக்கிறேன். அப்போதுதான் தெலுங்குப் பட வாய்ப்பு தேடிவந்தது. நானி சாருடன் 'கேங் லீடர்' படத்தில் நடித்தேன்.
"இயக்குநர் விக்ரம் குமார், பி.சி. ஸ்ரீராம் இருவரும்தான் நடிப்புத் தேர்வு, ஒப்பனைத் தேர்வுக்குப் பிறகு என்னைத் தேர்வு செய்தனர். படப்பிடிப்பின் முதல் நாளன்று சற்று மிரண்டு போனேன். காரணம் நானி சார் தவிர மூத்த நடிகைகள் லட்சுமி, சரண்யா ஆகியோரும் இருந்தனர்.
"அனுபவ நடிகைகளான அவர்களுடன் இணைந்து நடித்தபோது கொஞ்சம் உதறல் ஏற்பட்டது. ஆனால் இருவருமே மிகவும் கனிவானவர்கள். என் மனநிலையைப் புரிந்துகொண்டு அன்பாகப் பேசி, தயக்கத்தைப் போக்கி தைரியமூட்டினர்," என்கிறார் பிரியங்கா மோகன்.
'கேங் லீடர்' படத்தில் தாம் ஒப்பந்தமான நாள்தான் வாழ்நாளில் மறக்கமுடியாத தருணம் என்று குறிப்பிடுபவர், அந்தப் படத்தில் நடித்து முடிப்பதற்குள் திரையுலகின் நெளிவு சுளிவுகள், நுணுக்கங்கள் பலவற்றைக் கற்றுக்கொண்டதாகச் சொல்கிறார்.
"சிவாவுடன் நடிக்கும் 'டாக்டர்' படத்தில் ஒப்பந்தமானதும் மறக்க முடியாத தருணம்தான். சிவாவைப் பொறுத்தவரை பழகுவதற்கு மிக இனிமையானவர். அவரைப் பற்றி ஒரு ரகசியம் சொல்கிறேன். இனிப்புகள் என்றால் மிகவும் விரும்பிச் சாப்பிடுவார். உணவுக் கட்டுப்பாடுகளை மறந்துவிடுவார்.
"டாக்டர்' படத்தில் நடித்தபோது நட்பாகப் பழகியதுடன் சினிமா சார்ந்த சந்தேகங்கள் பலவற்றைப் போக்கினார்.
"சூர்யாவுடன் இணைந்து நடிக்கும் படத்தின் பணிகள் இன்னும் துவங்கவில்லை. விக்ரம் குமார் இயக்கத்தில் உருவான '24' படத்தில் சூர்யாவின் நடிப்பைக் கண்டு வியந்திருக்கிறேன்.
"படப்பிடிப்பின்போது தான் அவருடன் பேச வேண்டும். அதற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்," என்று சொல்லும் பிரியங்கா மோகனுக்கு, காதல் மீது மிகுந்த நம்பிக்கை உண்டாம்.
ஆனால், காதல் திருமணம், நிச்சயிக்கப்பட்ட திருமணம் ஆகியவற்றில் எது சிறந்தது என்று கேட்டால், தம்மால் பதில் சொல்ல இயலாது என்கிறார்.
"இப்போதைக்கு சினிமாவில் மட்டுமே என் கவனம் குவிந்திருக்கிறது. மேடை நாடகத்தில் இருந்து வெள்ளித்திரை வரை வந்திருக்கிறேன். மேடையில் நடிக்கும்போது எதிரே ரசிகர்கள் இருப்பதால் ஏதும் தவறு செய்துவிடக்கூடாது எனும் உதறல் ஏற்படும். ஒப்பனை செய்துகொள்ள வேண்டிய அவசியமில்லை. சினிமாவைப் பொறுத்தவரை ஒப்பனை அவசியம் என்பது புரிந்துவிட்டது. மேலும், கண் எதிரே பார்வையாளர்கள் இல்லை என்பதால் தைரியமாக நடிக்கலாம்," என்கிறார் பிரியங்கா.
தெலுங்கில் தனது முதல் படத்தின் மூலமாகவே ரசிகர்களைக் கவர்ந்துவிட்ட பிரியங்கா, தனது சம்பளத்தை உயர்த்தி இருப்பதாகத் தகவல். அதுகுறித்துப் பேசுவதைத் தவிர்த்துவிடுகிறார். அதேசமயம் திறமைக்கேற்ற ஊதியத்தைப் பெறுவதில் எந்தக் கலைஞரும் தயங்கக் கூடாது என்றும் சொல்கிறார்.
"தெலுங்கு, தமிழ் சினிமா ரசிகர்கள் தங்கள் அபிமான நாயகிகளிடம் வெகுவாக அன்பு பாராட்டுகிறார்கள். தங்கள் அபிமானக் கலைஞர்களுக்காக பதாகைகளுக்கு பாலாபிஷேகம் செய்வதில் தொடங்கி கோவிலும்கூட கட்டுகிறார்கள். இப்படிப்பட்ட ரசிகர் கூட்டம் வேண்டும் என்பதே என் விருப்பம்," என்கிறார் பிரியங்கா மோகன்.

