அதர்வாவுக்கு கொரோனா தொற்று
நடிகர் அதர்வாவுக்கு கொரோனா கிருமித்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து வீட்டிலேயே தம்மை தனிமைப்படுத்திக் கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டதையடுத்து பரிசோதனை செய்து கொண்டதாகவும் அதில் தொற்று இருப்பது உறுதியானதாகவும் டுவிட்டர் பதிவு ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றி வருகிறேன். விரைவில் நான் குணம் பெற்று பணிகளை தொடர்வேன் என்று நம்புகிறேன்," என்று கூறியுள்ளார் அதர்வா.
நன்றி தெரிவித்த மிருணாளினி
பொன் ராம் இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள 'எம்.ஜி.ஆர் மகன்' திரைப்படம் வரும் 23ஆம் தேதி வெளியாக உள்ளது. இதில் 'டிக்டாக்' புகழ் மிருணாளினி நாயகியாக நடித்துள்ளார்.
இப்படக்குழுவினர் நேற்று முன்தினம் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது தாம் வெளியிட்ட சிறிய காணொளிப் பதிவைப் பார்த்து, தனது திறமையை எடை போட்டு வாய்ப்பளித்ததற்காக இயக்குநர் பொன் ராமுக்கு நன்றி தெரிவித்தார் மிருணாளினி.
"மேலும், எனக்கேற்ற கதாபாத்திரத்தையும் தந்துள்ளார். அவரது பெயரைக் காப்பாற்றும் வகையில் நல்ல கதாபாத்திரங்களில் நடிப்பேன். அனுபவம் உள்ள சக நடிகர்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன்," என்றார் மிருணாளினி.

