ஒரு வழியாக பல ஆண்டுகள் கிடப்பில் கிடந்த 'மதகஜராஜா' படம் வெளியீடு காண உள்ளது. விஷால், வரலட்சுமி சரத்குமார், அஞ்சலி ஆகியோர் நடித்துள்ள இப்படத்தை சுந்தர்.சி இயக்கி உள்ளார்.
இந்நிலையில் படத்தை தயாரித்த நிறுவனத்துக்கு பொருளாதாரப் பிரச்சினை ஏற்பட்டதால் வெளியீடு முடங்கியதாக தகவல் வெளியானது. இதனால் தாமே படத்தை வெளியிடுவது என்று முடிவு செய்தார் விஷால்.
எனினும் ஒருசிலர் பண விவகாரத்தில் தலையிட வேண்டாம் என்று அறிவுரை கூறினார்களாம். குறிப்பாக நடிகர் விஜயகாந்த் தனிப்பட்ட வகையில் நேரில் அழைத்து அவசரப்பட வேண்டாம் என்று அறிவுறுத்தினாராம்.
இந்நிலையில் சுமார் ஆறு ஆண்டுகால இழுபறிக்குப் பிறகு நேரடியாக இணையத்தில் வெளியீடு காண்கிறது 'மதகஜராஜா'.
தாமதமாக வெளியீடு கண்டாலும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் இந்தப் படம் உருவாகி உள்ளது என்றும் குறிப்பாக இளையர்களுக்கு இந்தப் படம் பிடிக்கும் என்றும் படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.