திரைத் துளிகள்

திரைத் துளிகள்

2 mins read
7d976421-c8bb-4369-a455-77f0e96675c7
-
multi-img1 of 3

முதல்வர் மகளாக நயன்தாரா

புதுப்படம் ஒன்றில் முதல்வர் மகளாக நடிக்கிறார் நயன்தாரா.

மலையாளத்தில் வெற்றி பெற்ற 'லூசிபர்' படம் தெலுங்கில் மறுபதிப்பாகிறது. மோகன்ராஜா இயக்கும் இந்தப் படத்தில் சிரஞ்சீவி நாயகனாக நடிக்கிறார்.

200 கோடி ரூபாய் செலவில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது. இந்நிலையில், மலையாளத்தில் மஞ்சுவாரியர் நடித்திருந்த மாநில முதல்வரின் மகள் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிப்பதாகத் தகவல். அதற்கான பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாம். இரண்டு மாதங்களுக்கு முன்பே நயன்தாராவை அணுகியபோது அவர் கேட்ட சம்பளம் காரணமாக பேச்சுவார்த்தை முறிந்தது. பின்னர் கொரோனா விவகாரத்தால் படப்பிடிப்பும் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் தயாரிப்புத் தரப்பு மீண்டும் நயன்தாராவை அணுக, அவர் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளதாகத் தகவல்.

சமந்தா: முற்றுப்புள்ளி வைப்பேன்

யார் கண்பட்டதோ தெரியவில்லை. இணயத்தில் நேரடியாக வெளியான, நாயகிகளை முன்னிலைப் படுத்தும் படங்கள் வசூல் ரீதியில் பெரிய வரவேற்பைப் பெறவில்லை என்கிறார்கள் கோடம்பாக்கத்து விவரப்புள்ளிகள்.

இந்நிலையில் சமந்தா நடித்துள்ள 'தி ஃபேமிலி மேன்' இணையத்தொடர் வெளியாக உள்ளது. இத்தொடரின் முதல் பாகம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் இரண்டாம் பாகத்தில் சமந்தா வில்லியாகத் தோன்றுகிறார்.

ஜோதிகா நடித்த 'பொன்மகள் வந்தாள்' இணையத்தில் வெளியீடு கண்டு ஓரளவு வரவேற்பைப் பெற்றது. அதன்பின்னர் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியீடு கண்ட 'மிஸ் இந்தியா', 'பென்குயின்' ஆகிய இரு படங்களும் சொல்லிக்கொள்ளும்படி வசூல் காணவில்லை என்கிறார்கள்.

இதேபோல் காஜல் நடித்து வெளியான 'லைவ் டெலிகாஸ்ட்', தமன்னா நடித்து வெளியீடு கண்ட '11 ஹவர்' ஆகிய தொடர்களும் நஷ்டத்தை மட்டுமே ஏற்படுத்தினவாம். ஆனால் சமந்தாவோ இந்தத் தொடர் தோல்விக்கு தாம் நடித்துள்ள இணையத் தொடர் முற்றுப்புள்ளி வைக்கும் என்கிறார்.

அலங்கோலமான அழகு சிகிச்சை

அழகு சிகிச்சையின் காரணமாக தமது முகம் வீங்கிப் போயுள்ளதாக நடிகை ரைசா வில்சன் கூறியுள்ளார்.

வீங்கிய முகத்துடன் தாம் காட்சியளிக்கும் அண்மைய புகைப்படம் ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். இதைக்கண்டு ரசிகர்கள் பதறிப் போயுள்ளனர்.

"அண்மையில் எளிமையான முறையில் என் முகத்தை பொலிவூட்டுவதற்காக அழகுக்கலை நிலையத்திற்குச் சென்றிருந்தேன். அதன் உரிமையாளரான ஒரு பெண்மணி நான் வேண்டாம் என்று சொன்னபோதும் கட்டாயப்படுத்தி என்னைச் சில அழகு செயல்முறைகளுக்கு உட்படுத்தினார்.

"அதன் விளைவாக என் முகம் வீங்கிப் போயிருக்கிறது. இதையடுத்து அவரைத் தொடர்பு கொண்டபோது என்னிடம் பேச மறுத்துவிட்டார். அழகு நிலைய ஊழியர்களிடம் கேட்டபோது உரிமையாளர் வெளியூர் சென்றுவிட்டதாகக் கூறுகின்றனர்," என்று இன்ஸ்டகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளார் ரைசா வில்சன்.

அவருக்கு ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.