மிருணாளினியை கோடம்பாக்கத்தில் பெரும்பாலானோர் 'கண்ணழகி' என்றுதான் குறப்பிடுகிறார்கள்.
'டிக்டாக்' செயலி மூலம் ஏராளமான காணொளிகள் வெளியிட்டு மில்லியன் கணக்கான ரசிகர்களைப் பெற்றிருப்பவர் மிருணாளினி. தமிழகத்தில் பெரும்பாலான இளையர்களுக்கு அவரைத் தெரிந்திருக்கக்கூடும்.
தெரியாதவர்களுக்காக அவரைப் பற்றிய சில விவகரங்கள். புதுவையில் பிறந்து பெங்களூருவில் வளர்ந்த தமிழ்ப்பெண் மிருணாளினி. பொறியியல் துறையில் பணியாற்றிக்கொண்டிருந்தவர் 'டிக்டாக்' மூலம் பிரபலமாகி, அதன்மூலம் திரையுலகில் நுழைந்திருக்கிறார்.
தியாகராஜன் குமாரராஜாவின் 'சூப்பர் டீலக்ஸ்'தான் இவர் அறிமுகமான படம். சிறிய கதாபாத்திரம் என்றாலும் ரசிகர்களின் மனதில் பதிந்துவிட்டார். அதன்பின்னர் சுசீந்திரனின் 'சாம்பியன்' படத்தில் முக்காடு அணிந்து தனது முகபாவங்களால் அசத்தினார்.
தற்போது விக்ரம், ஆர்யா, விஷால் என கோலிவுட்டின் பல முன்னணி நாயகர்களுடன் சில படங்களில் நடித்து வருகிறார். சசிகுமாருடன் இணைந்து மிருணாளினி நடித்துள்ள 'எம்.ஜி.ஆர். மகன்' திரைப்படம் விரைவில் வெளியாகிறது.
யாரிடமும் நடிப்பைக் கற்றுக்கொள்ளாமல், யார் பாணியையும் பின்பற்றாமல், இயல்பாக நடிப்பதே தமது பலம் என்று நினைப்பதாகச் சொல்கிறார்.
"ஒரு பெண்ணாக நிஜ வாழ்க்கையில் மிருணாளினி எப்படி உணர்ச்சிகளை வெளிப்படுத்துவாளோ அதையேதான் படத்தில் நடிக்கும்போதும் செய்கிறேன். எனது இந்த நடிப்பு மக்களுக்குப் பிடித்திருக்கிறது என்பது அவர்களுடைய பாராட்டுகள் வழி தெரிகிறது. 'நீ, நீயாக இரு... நடிக்க முயற்சி செய்யாதே' என்று சொல்லித்தான் நான் இதுவரை நடித்துள்ள படங்களின் இயக்குநர்கள் என்னை வழிநடத்தியுள்ளனர்," என்கிறார் மிருணாளினி.
இவர் முறைப்படி பரதம் பயின்றதாக முன்பு வெளியான தகவல் உண்மை அல்லவாம். மிருணாளினியின் தாயார்தான் நடனம் கற்றவர்.
ஒருவேளை தம் அம்மாவின் திறமை மரபணு மூலமாக தமக்கும் வந்திருக்கக்கூடும் என்று கிண்டலாகச் சொல்கிறார். கல்லூரி கலைவிழாக்களில் நிறைய நடனமாடி உள்ளாராம். சில சமயங்களில் நடனம் அமைத்த அனுபவமும் உண்டாம்.
"பொறியியல் வேலையில் மாதம் 40 ஆயிரம் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்தேன். அதற்குக் குடும்பத் தேவை காரணமல்ல. ஒரு பெண்ணாக சொந்தக் காலில் நிற்க பழகிக்கொள்ள வேண்டும் என்பதே என் கொள்கை. என் பெற்றோர் அப்படித்தான் என்னை வளர்த்துள்ளனர்.
"வேலையைக் கைவிட்டபோது, சற்று குழப்பமாக இருந்ததே தவிர, கஷ்டம் ஏதுமில்லை," என்று சொல்பவர், சினிமாவுக்காக தாம் பார்த்துவந்த வேலையை மகிழ்ச்சியாகத்தான் கைவிட்டுள்ளார்.
வேலை பார்த்தபோதுதான் 'டிக்டாக்' காணொளிகள் இவருக்குப் புகழைத் தேடிக் கொடுத்தன. அழகான கண்கள்தான் தனது பலம் என்று குறிப்பிடுபவர், தன் கண்களைப் பெற்றோர் தந்த பரிசாக கருதுவதாகச் சொல்கிறார்.
"அப்பாவின் பிரவுன் நிறக் கண்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அம்மாவுக்கோ பெரிய கண்கள். இவர்கள் இருவருடைய கலவையாக அமைந்த கண்கள் எனக்குக் கிடைத்த வரப்பிரசாதம். இயக்குநர்களும் ஒளிப்பதிவாளர்களும் கேமரா வழியாக என் கண்களைப் பார்த்து வெகுவாகப் பாராட்டி உள்ளனர்.
"சினிமாவில் நடிக்க பெற்றோர் முதலில் அனுமதி தரவில்லை. சிறு கதாபாத்திரங்களில்தான் நடிக்கிறேன் என்று கூறி சமாதானப்படுத்தினேன். எனினும் சினிமா துறை பாதுகாப்பானது என்பது தெரிய வந்ததும் அனுமதி கொடுத்தனர்," என்கிறார் மிருணாளினி.

