சூர்யாவுடன் இணையும் பூஜா
விஜய்யின் 'தளபதி 65' படத்தை அடுத்து சூர்யாவின் புதுப் படத்திலும் பூஜா ஹெக்டேவை நாயகியாக ஒப்பந்தம் செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. அடுத்து வெற்றி மாறனின் 'வாடிவாசல்' படத்தை இந்தாண்டு இறுதிக்குள் முடிக்கத் திட்டமிட்டுள்ளார்.
அடுத்தாண்டு துவக்கத்தில் 'சிறுத்தை' சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பது உறுதியாகி உள்ளது. இப்படத்தில் நடிக்க பூஜா ஹெக்டே ஒப்பந்தம் செய்யப்பட இருப்பதாகவும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மீண்டும் தயாராகும் சாயிஷா
நடிகை சாயிஷா மீண்டும் முழு வீச்சில் திரைப்படங்களில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் தாம் தீவிர உடற்பயிற்சி மேற்கொள்ளும் காணொளித் தொகுப்பு ஒன்றை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
கன்னட நடிகர் புனித் ராஜ்குமாருடன் சாயிஷா நடித்த 'யுவரத்னா' என்ற படம் கடந்த 1ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதையடுத்து மேலும் சில வாய்ப்புகள் வந்துள்ளனவாம். இதனால் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளாராம். சாயிஷா நடிக்கும் புதுப்படங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும்.
திருவிழாவை எதிர்க்கும் பார்வதி
சமூக அக்கறையுடன் கருத்துகளைத் தைரியமாக வெளியிடும் நடிகைகளில் பார்வதியும் ஒருவர்.
கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் நிலையில் கேரளாவில் ஆண்டுதோறும் நடைபெறும் புகழ்பெற்ற பூரம் திருவிழா நடத்த அவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அவரது அக்கறையையும் தைரியத்தையும் சமூக வலைத்தளங்களில் பலரும் பாராட்டி உள்ளனர்.

