'காளிதாஸ்' படத்தின் வெற்றிக்குப் பிறகு படங்களைத் தேர்வு செய்வதில் மிகுந்த கவனத்துடன் இருப்பதாகச் சொல்கிறார் பரத்.
தற்போது 'யாக்கைத் திரி'யில் நடித்துள்ளவர், இந்தப் படமும் ரசிகர்களைக் கவரும் என நம்பிக்கையுடன் பேசுகிறார்.
முக்கோணக் காதல் கதையுடன் உருவாகும் 'யாக்கைத் திரி'யில் பரத்துக்கு ஜனனி ஐயர், சோனாக்ஷி சிங் ரவத் என இரு ஜோடிகள். பிரதாப் போத்தன், பாண்டியராஜன், பேராசிரியர் ஞானசம்பந்தன், நடிகை சுதா சந்திரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்க பரத் மோகன் இயக்குகிறார்.
"இது இசைக்கும் காதலுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் படம். அரோல் கரோலி இசையமைத்துள்ளார். படத்தில் இடம்பெறும் 4 பாடல்களும் இளையர்களை மட்டுமல்லாமல் எல்லா வயதினரையும் ரசிக்க வைக்கும். நீண்ட நாள்களுக்குப் பிறகு கர்நாடக இசைப்பாடகி பாம்பே ஜெயஸ்ரீ ஒரு பாடலைப் பாடி உள்ளார்," என்கிறார் இயக்குநர் பரத் மோகன்.
முக்கோணக் காதல் கதையில் நடித்த அனுபவம் மறக்கமுடியாத ஒன்று என்றும் தமது பாத்திரத்துக்காக சற்றே மெனக்கெட்டதாகவும் கூறுகிறார் பரத். எனினும் சில சவாலான காட்சிகளில் நடித்தபோது தரமான படத்தில் நடித்த மனநிறைவு ஏற்பட்டதாம்.
"இதுவரை திரையில் பலமுறை எனக்குத் திருமணம் நடந்துள்ளது. ஆனால் இந்தப் படத்தில்தான் முதன்முறையாக கதைப்படி நான் இருவரை திருமணம் செய்கிறேன். இதுவே ஒரு வித்தியாசமான அனுபவம்தான்.
"கதைப்படி ஜனனி, சோனாக்ஷி ஆகிய இருவருமே என்னைக் காதலிக்கிறார்கள். ஒருகட்டத்தில் இருவரையும் திருமணம் செய்துகொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதில் கூடுதல் சுவாரசியம் என்னவென்றால், இரண்டு திருமணக் காட்சிகளுமே ஒரே நாளில்தான் படமாக்கப்பட்டன.
"ஒரு படத்தின் படப்பிடிப்பில் அடுத்தடுத்து இரண்டு பேரை திருமணம் செய்துகொள்ளும் காட்சி படமாக்கப்பட்டதும் எனக்கு புது அனுபவம்," என்கிறார் பரத். குறிப்பிட்ட அந்தக் காட்சிகளைப் படமாக்கியபோது வேட்டி சட்டையுடன் படப்பிடிப்புக்குச் சென்றாராம். முதலில் பரத், ஜனனி சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுத்துள்ளார் இயக்குநர் பரத் மோகன்.
"அந்தக் காட்சி எடுக்கப்பட்ட அடுத்த சில நிமிடங்களில் என்னைச் சுற்றியுள்ள கதாபாத்திரங்கள், திருமணம் நடைபெறும் இடம், திருமணத்துக்கு வந்துள்ள கூட்டம், எனது தோற்றம் ஆகிய எல்லாமே மாறிவிடும்.
"அதுமட்டுமல்ல எனது உடல்மொழி, வசனங்கள், முகபாவங்களும் மாறவேண்டும் என்று இயக்குநர் கூறிவிட்டார். அதனால்தான் சற்றே மெனக்கெட்டதுடன் கவனமாகவும் இருந்தேன்," எனகிறார் பரத்.
கதைப்படி இரு கதாநாயகிகளையும் ஓராண்டு இடைவெளியில் திருமணம் செய்துகொள்வதாகத்தான் இருக்கிறதாம். ஆனால் கொரோனா விவகாரத்தால் கடந்தாண்டு படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. எனவே, இந்தாண்டு படப்பிடிப்பைத் தொடங்கியதும் 30 நாள்களிலே அனைத்துக் காட்சிகளையும் எடுத்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால்தான் இரு திருமணங்களையும் (கதைப்படி) ஒரே நாளில் நடத்தியதாகச் சொல்லி சிரிக்கிறார் இயக்குநர் பரத் மோகன்.
"ஒரே மாதத்தில் ஒரு படத்தை எடுத்து முடிப்பது எளிதான காரியமல்ல. அனுபவ நடிகராக இதில் உள்ள சிரமங்களை நானும் அறிந்துள்ளேன். பல நாட்கள் இரவு முழுவதும் படப்பிடிப்பு நீடித்து அதிகாலையில்தான் முடிந்தது.
"அதன்பின்னர் வீடு திரும்பி நான்கைந்து மணி நேர ஓய்வுக்குப் பிறகு மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்றேன். ஒரு நாள் நான் இருசக்கர வாகனத்தில் செல்லும் முக்கிய காட்சி ஒன்றை இரவில் படமாக்கினர்.
"ஏற்கெனவே களைப்பாக இருந்த நிலையில் கேமராவுக்கு முன்னால் சீரான வேகத்தில், ஒரே நேர்க்கோட்டில் இருசக்கர வாகனத்தை செலுத்துவது கடினம். மேலும் கேமராவை விட்டு நான் விலகிச் சென்றுவிடக் கூடாது என்பதும் முக்கியம். தூக்கமின்மையும் களைப்பும் சேர்ந்துகொள்ள பல 'டேக்கு'கள் என்னால் வீணாகின. எனினும் படக்குழுவினர் முழுமையாக ஒத்துழைப்பு வழங்கினர். இப்படி ஒருவருக்கொருவர் நன்கு புரிந்துகொண்டு செயல்பட்டோம்," என்கிறார் பரத்.
, :
பரத்

