'வலிமை 'படத்தின் படப்பிடிப்பை நடத்துவதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. படக்குழுவினர் வெளிநாடு செல்ல இருந்த திட்டம் கடைசி நேரத்தில் கைவிடப்பட்டுள்ளது.
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம் 'வலிமை'. போனிகபூர் தயாரிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்தி நடிகை ஹூமா குரேஷி நாயகியாக நடிக்கும் இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன.
ஒரு சண்டைக்காட்சி மட்டுமே எஞ்சியுள்ளது. எனவே, ஆகஸ்ட் மாதம் 'வலிமை' வெளியாகும் என கருதப்பட்டது.
எஞ்சி உள்ள சண்டைக் காட்சியை ஸ்பெயினில் படமாக்க வேண்டும் என்பதே இயக்குநர் எச். வினோத்தின் திட்டம்.
அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயாரான நிலையில், ஐரோப்பாவில் கொரோனா கிருமித்தொற்றுப் பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதாகக் கூறப்பட்டதை அடுத்து 'வலிமை' படப்பிடிப்பு கைவிடப்பட்டுள்ளது.
இதையடுத்து அமெரிக்கா அல்லது ஃபிரான்சில் படப்பிடிப்பை நடத்தலாமா என்று படக்குழுவினர் பரிசீலித்து வருகிறார்களாம்.
ஆனால், இருசக்கர வாகனத்தில் நாயகன் அஜித்தை எதிரிகள் துரத்துவது போன்ற அக்குறிப்பிட்ட துரத்தல் காட்சியைப் படமாக்குவதில் ஸ்பெயினில் உள்ள சண்டைக் கலைஞர்கள்தான் திறமைசாலிகள் என்றும் அங்கு காட்சியைப் படமாக்கினால்தான் நூறு விழுக்காடு சிறப்பாக அமையும் என்றும் கூறி வருகிறாராம் வினோத்.
வேண்டுமானால் மேலும் இரண்டு மாதங்களுக்கு காத்திருக்கலாம் என்றும் தயாரிப்புத் தரப்பிடம் கூறியுள்ளாராம்.
இதனால் ஆகஸ்ட் மாதம் 'வலிமை' வெளியாவது சந்தேகம்தான் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.
எனவே எதிர்வரும் தீபாவளிப் பண்டிகையையொட்டி படத்தை வெளியிடுவதற்கான திட்டத்தை வகுத்து வருகிறார் இயக்குநர் வினோத்.
இதனால் வரும் தீபாவளி சமயத்தில் வெளியாக உள்ள ரஜினியின் 'அண்ணாத்த' படத்துடன் 'வலிமை' மோதக்கூடும். முன்னதாக 2020ஆம் ஆண்டு தீபாவளி சமயத்திலேயே 'அண்ணாத்த', 'வலிமை' ஆகிய இரு படங்களும் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஏற்கெனவே சில ஆண்டுகளுக்கு முன்பு அஜித்தின் 'விஸ்வாசம்', ரஜினியின் 'பேட்ட' படங்கள் திரையில் மோதியுள்ளன.
இந்நிலையில் அஜித்தின் பிறந்தநாளான எதிர்வரும் மே 1ஆம் தேதி 'வலிமை' படத்தின் முதல்தோற்ற சுவரொட்டியை வெளியிடப் போவதாக அறிவித்துள்ளனர்.
சுவரொட்டியைக் காண மிகுந்த ஆவலுடன் காத்திருப்பதாக அஜித்தின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இப்படம் குறித்த ஏதேனும் ஒரு தகவலை ரசிகர்களுக்குத் தொடர்ந்து தெரிவிக்க வேண்டும் என்று படக்குழுவுக்கு அஜித் அறிவுறுத்தி உள்ளாராம்.
'வலிமை' பற்றி நீண்ட நாட்களாக எந்தத் தகவலும் வெளியாகாததால் அண்மையில் அஜித் ரசிகர்கள் பல பிரபலங்களை சமூக வலைத்தளம் மூலம் தொடர்புகொண்டு 'வலிமை' குறித்து விசாரித்தனர். இதனால் அஜித் வருத்தம் அடைந்தார்.

