திரைத் துளிகள்

திரைத் துளிகள்

2 mins read
b5a7be6d-ddcb-485c-82a9-cdb420fa39fa
-
multi-img1 of 2

செய்தியாளர் வேடத்தில் ஷ்ருதி

'பாகுபலி' பிரபாஸ் நடிப்பில் உருவாகும் 'சல்லார்' படத்தில் நாயகியாக நடிக்கிறார் ஷ்ருதிஹாசன்.

ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட நான்கு மொழிகளில் இப்படம் வெளியீடு காண்கிறது. பிரசாந்த் நீல் இயக்குகிறார்.

இந்நிலையில் ஷ்ருதிஹாசன் இப்படத்தில் அரசியல் செய்தியாளராக நடிப்பது தெரியவந்துள்ளது. படத்தின் முக்கிய திருப்பங்களை ஏற்படுத்தும் கதாபாத்திரம் என்பதால் ஷ்ருதிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாம். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

"இதுபோன்ற சவாலான கதாபாத்திரங்களில் நடிப்பது மிகுந்த உற்சாகம் அளிக்கும் என்பதுடன், நாட்டு நடப்புகளையும் சமூகத்தில் வேரூன்றியுள்ள சில முக்கிய விஷயங்களையும் கற்றுக்கொள்ள முடிகிறது," என்கிறார் ஷ்ருதிஹாசன்.

மகனை அறிமுகம் செய்த இந்துஜா

தமிழகத்தில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில், திரையுலகப் பிரபலங்களின் கவனம் மீண்டும் சமூக வலைத்தளங்கள் பக்கம் திரும்பி உள்ளது.

அந்த வகையில் 'மேயாத மான்', 'மகாமுனி', 'பிகில்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இந்துஜா தனது செல்லப்பிராணியுடன் எடுத்துக்கொண்ட புகைப் படங்களை இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ளார்.

தான் வளர்க்கும் நாய்க்குட்டி மீது அளவுகடந்த பாசம் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், தமது பதிவின் இறுதியில் 'இதுதான் எனது முதல் மகன்' என்றும் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து செல்லப்பிராணிக்கும் அவருக்கும் ஏராளமான ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பெரும்பாலான படங்களில் குடும்பப்பாங்காக நடித்துள்ள இந்துஜா 'சூப்பர் டூப்பர்' என்ற படத்தில் மட்டும் கவர்ச்சியாக நடித்திருந்தார். அதுகுறித்து ரசிகர்கள் சிலர் எதிர்மறையாக விமர்சித்திருந்தனராம். எனவே, இனி கதாபாத்திரங்களைத் தேர்வு செய்வதில் கவனத்துடன் இருக்கப்போகிறாராம்.