நேரடியாக இணையத்தில் வெளியாகும் 'சர்தார் கா கிராண்ட் சன்' இந்திப் படத்தில் நடித்து முடித்துள்ளார் ரகுல் பிரீத்சிங்.
எதிர்வரும் மே 18ஆம் தேதி முன்னணி 'ஓடிடி' தளத்தில் இந்தப் படம் வெளியீடு காண்கிறது.
இப்படத்தின் படப்பிடிப்பின்போது கிடைத்த அனுபவங்களை வாழ்நாள் முழுதும் நெஞ்சில் சுமந்திருப்பேன் என்கிறார் ரகுல் பிரீத்சிங்.
"வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கக்கூடிய ஓர் இனிய அனுபவம் இந்தப் படத்தில் நடித்தபோதுதான் கிடைத்தது. டிரக் வாகனம் ஒன்றை ஓட்டப் பழகினேன்.
"அனைத்துவிதமான பாதுகாப்பு முன்னேற்பாடுகளுடன் இப்படியொரு சாகசம் செய்யும் வாய்ப்பு எளிதில் கிடைத்துவிடாது. அதனால்தான் இந்தளவு உற்சாகமாக இருக்கிறேன்," என்கிறார் ரகுல்.
ஒரு பஞ்சாபி இளைஞன் தனது பாட்டியின் அரவணைப்பில் வளர்கிறான். பாட்டியின் கடைசி விருப்பத்தை நிறைவேற்றும் பொறுப்பு அவன் தோளில் விழுகிறது.
அதற்காக அவன் என்னவெல்லாம் செய்கிறான் என்பதுதான் இந்தப் படத்தின் கதையாம். சரி, இதற்கும் ரகுல் டிரக் வாகனம் ஓட்டியதற்கும் என்ன தொடர்பு?
"இந்த வாகனத்தைப் பயன்படுத்தி சில காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. அந்தக் காட்சிகளில் நானும் வருகிறேன். அப்படிப்பட்ட சூழலில்தான் டிரக் ஓட்டிப் பழகும் வாய்ப்பு அமைந்தது.
"பொதுவாக எனக்கு வாகனங்கள் ஓட்டுவது என்றால் ரொம்பப் பிடிக்கும். டிரக்கைப் பார்த்தவுடன் அதை இயக்கவேண்டும் என்ற ஆசை எனக்குள் ஏற்பட்டதில் ஆச்சரியம் ஏதுமில்லை. இவ்வளவு பெரிய வாகனத்தை ஓட்டுவது அவ்வளவு எளிதல்ல என்பது எனக்கும் தெரியும்.
"ஆனால், நம்மால் முடியும் என்று உறுதியாக நம்பினேன். கடைசியில் ஒட்டுமொத்த அனுபவம் நான் கற்பனை செய்ததை விட இனிமையான ஒன்றாக அமைந்துவிட்டது," என்று பள்ளி மாணவி போல் கைகளைத் தட்டி, லேசாகக் குதித்து உற்சாகத்தை வெளிப்படுத்துகிறார் ரகுல்.
'சர்தார் கா கிராண்ட் சன்' இந்திப்படம் அம்மொழியில் தமக்கு மேலும் பல வாய்ப்புகளைப் பெற்றுத்தரும் என உறுதியாக நம்புவதாகவும் சொல்கிறார்.
தற்போது சிவகார்த்திகேயனுடன் 'அயலான்' படத்தில் நடித்து வருகிறார் ரகுல் பிரீத் சிங்.
இந்நிலையில் இந்தியிலும் நடிப்பதால் தனது சம்பளத்தை அவர் அதிகரித்திருப்பதாக அண்மையில் ஒரு தகவல் வெளியானது. இதில் உண்மை இல்லை என மறுத்துள்ளார் ரகுல்.
கொரோனா காலத்தில் புதுப்படத் தயாரிப்புப் பணிகள் பாதித்துள்ள நிலையில் யாரும் சம்பளத்தை உயர்த்த வாய்ப்பில்லை என்கிறார்.
ரகுல் பிரீத்சிங்

