'வலிமை' படத்தின் முதல் தோற்றச் சுவரொட்டியை எதிர்பார்த்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
கொரோனா இரண்டாவது அலையால் மொத்த நாடும் அல்லாடிக் கொண்டிருக்கும் நிலையில் முதல் தோற்றச் சுவரொட்டியை வெளியிடுவது சரியாக இருக்காது என்று கூறியுள்ளார் அப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர்.
முன்னதாக அஜித் பிறந்தநாளான மே 1ஆம் தேதி 'வலிமை' முதல் தோற்றச் சுவரொட்டி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் அந்த அறிவிப்பு வெளியிடப்பட்டபோது கொரோனா இரண்டாவது அலை ஒரு சுனாமியைப் போல் தாக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை என போனி கபூர் சுட்டிக் காட்டியுள்ளார்.
"இந்தத் தருணத்தில் நாட்டில் எண்ணற்றோர் பொருளாதாரம், உற்றார் உறவினர்களை இழந்து நோய்த்தொற்று பீதியிலும் அதிர்ச்சியிலும் ஆழ்ந்துள்ளனர். இத்தகைய அசாதாரண சூழ்நிலையில் படக்குழுவினர் ஒருங்கிணைந்து எடுத்துள்ள முடிவின்படி 'வலிமை'யின் முதல் தோற்றச் சுவரொட்டி வெளியீடு மற்றொரு தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது," என போனிகபூர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே ஜார்ஜியா நாட்டில் நடைபெற்று வரும் 'தளபதி 65' முதற்கட்ட படப்பிடிப்பு சில தினங்களில் முடிவுக்கு வர உள்ளது. இதையடுத்து இரண்டாம் கட்டப் படப்பிடிப்பை ஹைதராபாத்தில் நடத்தத் திட்டமிட்டுள்ளனராம்.
மேலும் சென்னையில் சில காட்சிகளைப் படமாக்கவும் வாய்ப்புள்ளதாம். அநேகமாக விஜய்யின் அறிமுகப் பாடல் முதலில் படமாக்கப்படும் எனத் தெரிகிறது.
'மாநாடு' படத்தின் தொடக்கத்தில் உடல் பெருத்துக் காணப்பட்ட சிம்பு, இப்போது கல்லூரி மாணவரைப் போல் கட்டுடலுடன் காணப்படுகிறார். இதனால் இப்படத்துக்காக முதலில் எடுக்கப்பட்ட சில காட்சிகளை மீண்டும் படமாக்கி வருகின்றனர்.
மே 14ஆம் தேதி ரம்ஜான் பண்டிகையையொட்டி இப்படத்தின் முதல் பாடல் வெளியாகிறது.
'அண்ணாத்த' படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெறுகிறது. அங்கு ஊரடங்கு அமலுக்கு வந்திருப்பதால் அம்மாநில அரசிடம் சிறப்பு அனுமதி பெற்று படப்பிடிப்பை நடத்த முயற்சிஎடுக்கப்படுவதாகத் தகவல்.

