அழகான முத்துக்களைத் தேர்வு செய்வது போன்று நல்ல கதைகளை அடையாளம் கண்டு நடித்து வருகிறார் பிரியா பவானி சங்கர்.
அசோக் செல்வனுடன் இணைந்து இவர் நடித்துள்ள 'ஹாஸ்டல்' திரைப்படம் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.
சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கும் இந்தப் படம் நான்கு மணி நேரம் மட்டுமே நடக்கும் கதையைக் கொண்டு உருவாகிறது. சார்லி சாப்ளின்தான் தனக்குப் பிடித்தமான மனிதர் என்கிறார் சுமந்த்.
காதல், அன்பு, வறுமை, கொடுமை என்று அனைத்தையும் தமது படைப்புகளில் கலவையாகக் கொடுத்த கலைஞன் சார்லி சாப்ளின் என்று குறிப்பிடுபவர், சாப்ளினைப் போன்று வாழ்க்கையை நகைச்சுவையாகப் பார்க்கத் தொடங்கிவிட்டால் சோதனைகளில் இருந்து தப்பித்து விடலாம் என்கிறார்.
"அதனால்தான் இந்தப் படத்தில் அனைவரும் இடைவிடாமல் சிரிக்கும் வகையில் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் அளித்திருக்கிறோம். கொரோனா காலகட்டத்தில் மக்கள் அனுபவித்து வரும் துன்பங்களை முற்றாக இது மறக்கச் செய்யும்.
"எப்போதுமே கதையுடன் இழைந்த நகைச்சுவை அமைந்தால் நல்லது. இந்தப் படத்தில் அவ்வாறு அமைந்துள்ளது," என்கிறார் சுமந்த்.
இன்றைய இளையர்களில் பலருக்கு கல்லூரி விடுதியில் தங்கிப் படித்த அனுபவம் இருக்கும் என்று குறிப்பிடுபவர், வீட்டிலிருந்து புறப்பட்டு வந்து அனைத்துக் கவலைகளையும் தற்காலிகமகாக மறந்து நிம்மதி பெறக்கூடிய இடமாக அந்த விடுதிகள் இருந்திருக்கும் என்கிறார்.
கல்லூரி விடுதியின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுவதால் வேறொரு இடத்துக்கு மாணவர்கள் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.
அசோக் செல்வன், சதீஷ், 'கலக்கப் போவது யாரு' யோகி, கிரிஷ் உள்ளிட்ட சிலர் இவ்வாறு இடம்பெயர்கிறார்கள்.
கல்லூரி விடுதிக்கு நாசரும் முனீஷ் காந்தும்தான் வார்டன்கள். மாணவர்கள் தேர்வில் கோட்டை விட்டாலும் பரவாயில்லை, ஒழுக்கத்துடன் இருக்கவேண்டும் என்பாராம் நாசர்.
இந்நிலையில் மாணவர் விடுதிக்கு இரவு 11 மணிக்கு வருகிறார் பிரியா பவானி சங்கர். அதிகாலை மூன்று மணிக்கு அவர் அங்கிருந்து வெளியேறுவதாக திட்டம் போடுவார்களாம்.
"இந்த இடத்தில் வேறு கற்பனைகளுக்கு இடமில்லை. மாணவர் விடுதிக்கு வரும் அவர், அங்கிருந்து வெளியேறுவதற்குள் பல்வேறு பிரச்சினைகள் தோன்றுகின்றன.
"மாணவர்கள் எப்படியெல்லாம் போராடி அவரை அனுப்பி வைக்கின்றனர் என்பதை முழுநீள கலாட்டாவாக சொல்லப் போகிறோம். நான்கு மணி நேரக் கதையை இரண்டு மணி நேரத்தில் சொல்லும்போது ரசிகர்கள் நகைச்சுவையில் மூழ்கிப் போவார்கள்.
"அசோக் செல்வன், பிரியா பவானி சங்கர் இருவருமே சிறப்பாக நடித்துள்ளனர். அசோக் செல்வன் பொறுத்தவரையில் நல்ல கதைகளாகத் தேர்வு செய்து நடிக்கிறார். அவரது நடிப்பும் மெருகேறி உள்ளது.
"மாணவர் விடுதிக்குள் நுழைந்து வெளியேறும் ஓர் இளம்பெண் எப்படியெல்லாம் நடந்துகொள்வார் என்பதை தமது நடிப்பில் அழகாக வெளிப்படுத்தி உள்ளார் பிரியா.
"அவரை நம்பி வித்தியாசமான, சவாலான கதாபாத்திரங்களை ஒப்படைக்கலாம். அவற்றில் தன்னை கச்சிதமாகப் பொருத்திக் கொள்கிறார்," என்று பாராட்டுகிறார் இயக்குநர் சுமந்த்.

