திடீரென பதின்மூன்று கிலோ எடை குறைத்து திரிஷா போன்ற ஒல்லி நடிகைகளுக்குப் போட்டியாக கோடம்பாக்கத்தில் களமிறங்கி உள்ளார் ஐஸ்வர்யா தத்தா.
'தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்' படத்தின் மூலம் அறிமுகமான ஐஸ்வர்யாவை அதன்பிறகு அதிக படங்களில் காண முடிவதில்லை. இந்நிலையில் சத்தமில்லாமல் ஐந்து புதுப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருவதாக அவர் சொல்வதைக் கேட்க ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. 'அலேகா', 'கன்னித்தீவு', 'பப்ஜி கேம்', 'மிளிர்', 'கெட்டவன்னு பெயரெடுத்த நல்லவன்டா' என தாம் நடிக்கும் படங்களின் பட்டியலை நீட்டுகிறார் ஐஸ்வர்யா. ஐந்து படங்களுமே விரைவில் வெளியீடு காணும் என்று சொல்லும்போது அவரது முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி.
பெங்காலி, இந்தி, ஆங்கிலம், தமிழ் என பல மொழிகளில் சரளமாகப் பேசும் ஐஸ்வர்யாவுக்கு அனைத்து மொழிகளிலும் நல்ல படங்களில் நடித்து பெயரெடுக்க ஆசையாம்.
ஏன் திடீரென உடல் இளைத்திருக்கிறீர்கள் என்று கேட்டால், உதடுகளில் விரலை வைத்து 'ஷ்' என்கிறார். வேறொன்றுமில்லை, 'ஷ்' என்பது இவர் நடித்து வரும் புதுப்படத்தின் தலைப்பு. அதில் ஏற்றுள்ள கதாபாத்திரத்துக்காகத்தான் இந்த அளவு இளைத்துக் காணப்படுகிறாராம்.
"இயல்பாகவே எனக்கு உடற்பயிற்சியில் ஈடுபாடு அதிகம். மேலும் யோகாசனமும் செய்வேன். இதனால் உடல் இளைக்குமே தவிர மனதளவில் 24 மணி நேரமும் உற்சாகமாக இருக்கும்.
"கொரோனா ஊரடங்குக்கு முன்பே நான் நடித்து வந்த படங்களுக்கான படப்பிடிப்புகள் முடிந்துவிட்டன. எனினும் ஓரிரு காட்சிகளை மீண்டும் படமாக்கவேண்டி இருந்ததால் அதற்கு கால்ஷீட் ஒதுக்கி உள்ளேன். இப்போது இரண்டு படங்களுக்கான படப்பிடிப்பு நடந்து வருகிறது," என்கிறார் ஐஸ்வர்யா தத்தா.
ஊரடங்கின்போது திரையுலகப் பிரபலங்கள் பலர் சமூக வலைத்தளங்கள் வழி ரசிகர்களுடன் தொடர்பில் இருந்தபோது ஐஸ்வர்யாவிடம் இருந்து எந்தவிதத் தகவலும் இல்லை. காரணம், கேட்டால் வீட்டுக்குள்ளேயே தனக்கான சிறு உலகத்தை அமைத்துக்கொண்டதாகச் சொல்கிறார்.
"ஊரடங்கின்போது நிறைய நேரமும் ஓய்வும் கிடைத்தது. இதைப் பயன்படுத்தி வீட்டுச் சமையல் அறையில் அதிக நேரத்தைச் செலவிட்டேன். பலவிதமான உணவுகளைச் சமைக்கக் கற்றுக் கொண்டேன்.
"என்னைப் பொறுத்தவரை பொதுமுடக்கத்தால் எனக்கு நன்மை நடந்திருப்பதாகவே தோன்றுகிறது. பலவகையில் என்னைப் பக்குவப்படுத்திக்கொள்ள வாய்ப்புகள் அமைந்தன.
"ஊரடங்குக்கு முன்பே நான் நடித்த சில படங்கள் வெளியாகி இருக்க வேண்டும். ஆனால் சில பிரச்சினைகளால் அது சாத்தியமாகவில்லை. இதற்காக இயக்குநர்கள் தயாரிப்பாளர்கள் மீது குற்றம் சாட்ட விரும்பவில்லை. ஏனெனில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக எதுவும் நம் கட்டுப்பாட்டில் இல்லை என்பது எல்லோருக்குமே தெரியும்," என்று சொல்லும் ஐஸ்வர்யா தத்தா மாடலிங் துறையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர். தத்தா என்பது குடும்பப் பெயராம். தமக்கும் உலக அழகி லாரா தத்தாவுக்கும் இடையே எந்த உறவும் இல்லை என்கிறார்.
"தத்தா என்று பெயர் இருந்தால் உறவு வந்துவிடுமா? லாராவும் நானும் மாடலிங் துறையைச் சேர்ந்தவர்கள் என்பது மட்டுமே இருவருக்கும் உள்ள ஒற்றுமை. எனது சொந்த ஊர் கோல்கத்தா. சிறு வயது முதலே சினிமா ஆர்வம் அதிகம். முதலில் விளம்பரங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
"துணிக்கடை விளம்பரத்தில் நடிக்க சென்னைக்கு வந்தபோதுதான் 'தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்' படவாய்ப்பு கிடைத்தது," என்று சொல்லும் ஐஸ்வர்யா, அதன் பிறகு 'பாயும்புலி', 'அச்சாரம்', 'ஆறாது சினம்' உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார். இரண்டு அல்லது மூன்று நாயகிகள் உள்ள படங்களில் நடிக்கவும் இவர் தயங்குவதில்லை.
பல படங்களில் குடும்பப் பாங்காக நடித்துள்ளவர் இப்போது கவர்ச்சிக்கும் தயாராக உள்ளாராம். இன்ஸ்டகிராமில் அண்மைக்காலமாக இவர் வெளியிடும் கவர்ச்சிப் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
ஐஸ்வர்யா மும்பையில் வசிப்பதாக வெளியான தகவல் உண்மைஇல்லை. பல ஆண்டுகளுக்கு முன்பே சென்னையில் குடியேறிவிட்டதாகச் சொல்கிறார்.

