எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் வெளியாகவுள்ள 'லாபம்' திரைப்படத்தின் பாடல், வெளியீடு கண்ட வேகத்தில் சாதனை படைத்துள்ளது.
விஜய் சேதுபதி, ஷ்ருதிஹாசன் இணைந்து நடித்துள்ள படம் 'லாபம்'. இதன் படப்பிடிப்பு முடிவடைந்து தொழில்நுட்பப் பணிகள் நடந்துகொண்டிருந்த நிலையில் உடல்நலக் குறைவால் எஸ்.பி. ஜனநாதன் காலமானார்.
'லாபம்' முன்னோட்ட காட்சித் தொகுப்பு ஏற்கெனவே வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதையடுத்து 'யாழா யாழா' என்ற பாடலை வெளியிட்டனர்.
அதற்கும் வரவேற்பு கிடைத்த நிலையில் அண்மையில் 'யாமிலி யாமிலியா' என்ற பாடல் வெளியிடப்பட்டது. இப்பாடல் வெளிவந்த 24 மணி நேரத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்து ரசித்துள்ளனர். இது படக்குழுவினருக்கு உற்சாகம் அளித்துள்ளது.
மறைந்த இயக்குநர் எஸ்.பி.ஜனனாதன் மீது மிகுந்த மரியாதை கொண்டிருப்பவர் விஜய் சேதுபதி.
அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இப்படத்தை மிகப்பெரிய அளவில் வெற்றிப் படமாக்க வேண்டும் என்று தயாரிப்புத் தரப்பிடம் கேட்டுக்கொண்டு உள்ளாராம். படத்தின் விளம்பர நடவடிக்கைகள் அனைத்திலும் பங்கேற்க முடிவு செய்துள்ளார்.

