திரைத் துளிகள்

திரைத் துளிகள்

2 mins read

சென்னை திரும்பிய விஜய் படக்குழு

'தளபதி 65' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததை அடுத்து ஜார்ஜியாவில் இருந்து சென்னை திரும்பியுள்ளார் விஜய்.

அடுத்தகட்ட படப்பிடிப்பு அடுத்த மாதம் சென்னையில் தொடங்க உள்ளது.

முதற்கட்ட படப்பிடிப்பில் விஜய், நாயகி பூஜா ஹெக்டே, முக்கிய தொழில்நுட்பக் கலைஞர்கள் மட்டுமே பங்கேற்றனர். அங்கு மூன்று நாட்கள் அடைமழை பெய்ததால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது.

எனினும் திட்டமிட்டபடி இரண்டு வாரங்களில் காட்சிகள் அனைத்தும் படமாக்கி முடிக்கப்பட்டன. இதையடுத்து விஜய் உள்பட படக்குழுவினர் அனைவரும் நேற்று முன்தினம் இரவு சென்னை திரும்பி உள்ளனர்.

முதலீடு செய்யும் கதாநாயகிகள்

திரையுலகில் சம்பாதிக்கும் பணத்தை வேறு தொழில்களில் முதலீடு செய்து பல நடிகைகள் லாபம் பார்த்து வருகிறார்கள்.

நடிகைகள் காஜல் அகர்வால், ஹன்சிகா, திரிஷா உள்ளிட்டோர் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். தற்போது சமந்தாவும் இணைந்துள்ளார்.

காஜல் அகர்வாலுக்கு மும்பையில் செயற்கை வகை நகைகள் செய்யும் நிறுவனம் உள்ளது. பெரிய விழாக்கள் நடைபெறும் இடங்களிலும் மேடைகளிலும் பலூன்கள், தோரணங்கள் கட்டி அலங்கரிக்கும் பணியைச் செய்கிறது ஹன்சிகாவின் நிறுவனம். இதற்காக மும்பையில் இரண்டு கடைகளைத் திறந்துள்ளார்.

சமந்தா இணையம் வழி ஜவுளி வியாபாரம் செய்கிறார். அண்மையில் தமது நிறுவனத்துக்கு 'சகி' என்று பெயர் சூட்டியுள்ள அவருக்கு எடுத்த எடுப்பிலேயே பல 'ஆர்டர்'கள் குவிகின்றனவாம். பெண்களுக்கான ஆடைகளை மட்டுமே விற்பனை செய்கிறது 'சகி'. மிக விரைவில் அனைவருக்கும் அனைத்து விதமான உடைகளையும் விற்க திட்டமிட்டுள்ளாராம் சமந்தா.

இவர்களது வழியைப் பின்பற்றி மேலும் பல நடிகர் நடிகைகள் பிற தொழில்களில் முதலீடு செய்வது குறித்து யோசித்து வருகின்றனராம். நடிகர்களைப் பொறுத்தவரை ஆர்யாவும் பரோட்டா சூரியும் உணவகங்கள் நடத்தி வருகிறார்கள்.

எச்சரிக்கை விடுத்த நடிகர் சிபிராஜ்

தமது பெயரைப் பயன்படுத்தி இணையத்தில் வெளியாகி உள்ள விளம்பரத்தை யாரும் நம்பவேண்டாம் என நடிகர் சிபிராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.

'சிபிராஜ் நடிக்கும் புதிய படத்தில் நடிக்க ஆட்கள் தேவை' என அண்மைய சில நாட்களாக இணையத் தளங்களில் விளம்பரம் ஒன்று உலா வருகிறது.

எத்தகைய கதாபாத்திரங்களுக்கு எந்த வயதில் நடிகர், நடிகைகள் தேவை என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமக்கும் இந்த விளம்பரத்துக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லையென சிபிராஜ் தெளிவுபடுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் தமது சமூகவலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

"கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்கள், இணையத்தில் காணப்படும் விளம்பரம் தற்போது என் கவனத்திற்கு வந்துள்ளது. இது முழுக்க போலியான ஓர் அறிவிப்பாகும். இதுகுறித்து எனக்கு எதுவும் தெரியாது.

"எனவே யாரும் இதை நம்பவேண்டாம். எனக்கும் இந்த விளம்பரத்துக்கும் எந்த வகையிலும் தொடர்பில்லை," என சிபிராஜ் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தற்போது தமிழில் இரண்டு படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார் சிபி.